தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் ஷிபு தமீன் தயாரித்திருக்கும் சாமி ஸ்கொயர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, நடிகர்கள் டெல்லி கணேஷ், பிரபு, இமான் அண்ணாச்சி, ஓ.ஏ.கே.சுந்தர், சூரி, ரமேஷ்கண்ணா, நடிகைகள் சுமித்ரா, உமா ரியாஸ், ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ், ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ், நடன இயக்குநர் பாபா பாஸ்கர், சண்டைப்பயிற்சி இயக்குநர் சில்வா, பாடலாசிரியர் விவேகா, இவர்களுடன் இயக்குநர் ஹரி, நடிகர் விக்ரம், தயாரிப்பாளர் ஷிபு தமீன், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மேலும் யாரும் எதிர்பாராத வகையில் அந்த விழாவில் ஃபைனான்சியர் அன்புச்செழியன் கலந்துகொண்டார். சசிகுமாரின் உறவினரும், தயாரிப்பாளருமான அசோக்குமாரின் மரணத்திற்கு காரணமாக சொல்லப்பட்ட ஃபைனான்சியர் அன்புச்செழியன் அந்த வழக்கில் தேடப்பட்ட பொழுதே முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் கலந்துகொண்ட அமைச்சர் செல்லூர் ராஜுவின் இல்ல விழாவில் கலந்துகொண்டு ஷாக் கொடுத்தார்.
முதல்வருடன் தனியறையில் பேசியதாகவும் சர்ச்சை எழுந்தது. அதன்பின் நீண்ட நாட்களாக வெளியே தலைகாட்டாமல் இருந்த பைனான்சியர் அன்புச்செழியன் இவ்விழாவில் கலந்துகொண்டது வந்திருந்த அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அசோக்குமார் மரணத்தின் போது இவரை எதிர்த்து விஷால், ஞானவேல்ராஜா, இயக்குனர் சுசீந்திரன் உள்ளிட்ட பலரும் குரல் கொடுத்தனர். அதே நேரம் இவருக்கு ஆதரவாகவும் சுந்தர்.சி, விஜய் ஆண்டனி போன்றோரின் குரலும் எழுந்தது. இந்த வழக்கில் முன்ஜாமீன் பெற்ற அன்புச்செழியன், இன்னும் வழக்கிலிருந்து வெளிவரவில்லை. ஆனாலும் தற்போது படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் 90% படங்களுக்கு இவர்தான் பைனான்சியர் என்பது குறிப்பிடத்தக்கது. கந்துவட்டி என்ற மிக மோசமான பிரச்சனையில் ஒரு மரணத்துக்குக் காரணமாக சொல்லப்படும் ஒருவர் மீது பெரிதாக எந்த நடவடிக்கையும் இல்லாதது வியப்பளிக்கிறது.