தமிழ் சினிமாவில் 'ஆம்பள' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஹிப்ஹாப் ஆதி, 'மீசைய முறுக்கு' படத்தின் மூலம் நடிகராகவும் அவதாரம் எடுத்தார். இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனையடுத்து 'நட்பே துணை, நான் சிரித்தால், சிவகுமாரின் சபதம்' உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு அடையாளத்தைப் பிடித்துள்ளார்.
இதனையடுத்து நடிகர் ஆதி தற்போது அறிமுக இயக்குநர் அஸ்வின் ராம் இயக்கும் 'அன்பறிவு' படத்தில் நடித்து வருகிறார். இதில் ஆதிக்கு ஜோடியாக காஷ்மீரா பர்தேஷி நடிக்கிறார். நெப்போலியன், விதார்த், தீனா ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சத்யா ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஆதி இசையமைக்கிறார். மதுரை கதைக்களத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.
இந்நிலையில் அன்பறிவு படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பிரபல ஓடிடி தளங்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.