நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் இயக்குநர் சேரன் இணைந்து நடிக்கும் படம் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’. இயக்குநர் நந்தா பெரியசாமி எழுதி, இயக்கும் இப்படத்தினை ஶ்ரீ வாரி ஃபிலிம் சார்பில் தயாரிப்பாளர் பி. ரங்கநாதன் தயாரிக்கிறார். 'சிவப்பு மஞ்சள் பச்சை' புகழ் சித்து குமார் இசையமைக்க, போரா பரணி ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்களை சினேகன் எழுதுகிறார். ஷிவாத்மிகா ராஜசேகர் நாயகி பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், சரவணன், டேனியல் பாலாஜி, வெண்பா, மொட்டை ராஜேந்திரன், விக்னேஷ், சிங்கம் புலி, கும்கி ஜோமல்லூரி, பாடலாசிரியர் சினேகன், நமோ நாராயணன், சௌந்தராஜன், மௌனிகா, மைனா, பருத்திவீரன் புகழ் சுஜாதா, பிரியங்கா, நக்கலைட்ஸ் தனம் என ஒரு பெரும் நடச்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ள இப்படத்தின் முழுப்படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது.
மேலும், இப்படத்தின் பின்னணி முடிந்து, படம் ரிலீஸுக்குத் தயாராகிவரும் நிலையில், இயக்குநர் நந்தா பெரியசாமி, ஶ்ரீ வாரி ஃபிலிம் தயாரிப்பாளர் பி. ரங்கநாதன் இருவரும் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வில் ஶ்ரீ வாரி ஃபிலிம் பி. ரங்கநாதன் பேசியபோது... "‘தர்மபிரபு' படத்திற்குப் பிறகு இது எனது இரண்டாவது படம். இயக்குநர் நந்தா பெரியசாமி முதலில் வேறொரு கதைதான் சொன்னார், ஆனால் அது எனக்கு சரிவரும் என தோணாததால் வேறொரு கதை கேட்டேன். அப்படி இவர் சொன்னதுதான் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’. 7 அண்ணன் தம்பிகளின் கதை. மிக வித்தியாசமாக இருந்தது. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனே ஒப்புக்கொண்டு இப்படத்தை ஆரம்பித்தேன். மிக நல்லதொரு படமாக, இப்படத்தை நந்தா பெரியசாமி உருவாக்கியுள்ளார். குடும்பங்கள் கொண்டாடும் படமாக இப்படம் இருக்கும் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி" என்றார்.
இதை தொடர்ந்து இயக்குநர் நந்தா பெரியசாமி பேசியபோது... "இது பொதுமுடக்கத்திற்கு முன் துவக்கப்பட்ட படம். 35 நட்சத்திரங்களுக்கு மேல் வைத்து இப்படத்தை ஆரம்பித்தோம், பெரும் தடைகள் பலவற்றைத் தாண்டி இப்படத்தை முடித்துள்ளோம். சேரன், சரவணன், கௌதம் கார்த்திக் என பெரிய நட்சத்திர பட்டாளமே இதில் நடித்திருக்கிறது. பொது முடக்க காலத்தில் தயாரிப்பாளர் முழு அர்ப்பணிப்புடன் இப்படத்தை உருவாக்க ஒத்துழைப்பு தந்தார். இப்படம் நன்றாக வர முழுமுதல் காரணமும் தயாரிப்பாளர்தான். தமிழில் குடும்பங்களுக்கான திரைப்படம் வராத ஏக்கத்தை இப்படம் போக்கும். ஒன்றாக இருக்கும், ஒரு குடும்பத்தில் சூழலால் வரும் பிரச்சனைகளை தாண்டி, அண்ணன், தம்பிகள் எப்படி ஒன்று சேர்கிறார்கள், நாயகன் எப்படி அவர்களை ஒன்று சேர்கிறான் என்பதுதான் கதை. ஷிவத்மிகா ராஜசேகர் நாயகியாக அறிமுகமாகிறார். அவருக்கு நன்றாக தமிழ் தெரிந்திருந்தது படப்பிடிப்பில் உதவியாக இருந்தது. நன்றாக நடித்துள்ளார். இப்படத்திற்குப் பிறகு அவருக்கு நிறைய வாய்ப்புகள் வரும். நடிகர் கௌதம் கார்த்திக் இப்படத்தில், எனக்குப் பெரிதும் உறுதுணையாக இருந்து, மிக அர்ப்பணிப்புடன் படத்தை முடித்துக் கொடுத்தார். படப்பிடிப்புக்கு முதல் ஆளாக வந்துவிடுவார். படப்பிடிப்பில் எல்லோருமே ஒன்றாக ஒரு குடும்பம் போல்தான் இருந்தோம். படமும் எல்லோரும் கொண்டாடும் படமாக இருக்கும் உங்கள் ஆதரவை படத்திற்கு தாருங்கள்" என்றார்.
‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், படத்தின் டீசர் தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது. மேலும், இத்திரைபடம் வரும் நவம்பர் மாதம் திரைக்குவரும் என தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.