நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் இயக்குநர் சேரன் இணைந்து நடிக்கும் படம் “ஆனந்தம் விளையாடும் வீடு”. இயக்குநர் நந்தா பெரியசாமி எழுதி, இயக்கும் இப்படத்தினை ஶ்ரீ வாரி ஃபிலிம் சார்பில் தயாரிப்பாளர் பி.ரங்கநாதன் தயாரிக்கிறார். 'சிவப்பு மஞ்சள் பச்சை' புகழ் சித்து குமார் இசையமைக்க, போரா பரணி ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்களை சினேகன் எழுதுகிறார். ஷிவாத்மிகா ராஜசேகர் நாயகி பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், சரவணன், டேனியல் பாலாஜி, வெண்பா, மொட்டை ராஜேந்திரன், விக்னேஷ், சிங்கம் புலி, கும்கி ஜோமல்லூரி, பாடலாசிரியர் சினேகன், நமோ நாராயணன், சௌந்தராஜன், மௌனிகா, மைனா, பருத்திவீரன் புகழ் சுஜாதா, பிரியங்கா, நக்கலைட்ஸ் தனம் என ஒரு பெரும் நடச்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ள இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் தற்போது முடிந்துள்ளது. இந்நிலையில் இப்படம் குறித்து தயாரிப்பாளர் ஶ்ரீ வாரி ஃபிலிம்ஸ் பி.ரங்கநாதன் கூறியபோது....
"ஆனந்தம் விளையாடும் வீடு" படம் பல ஆண்டுகளுக்குப் பிறகு எனது வாழ்வில் எனக்கு மிகவும் நெருக்கமான, சிறப்பான படமாக அமைந்தது. இந்தப் படம் கரோனா பெருந்தொற்றின் ஊரடங்கு காலத்தில், சிக்கலான நேரத்தில் தான் ஆரம்பிக்கப்பட்டது. மேலும் இரண்டாவது அலையால், பல தடங்கல்களைச் சந்தித்தது. எனினும் எங்கள் குழுவினரின் கடின உழைப்பினாலும், உதவியாலும் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் மிகப்பெரிய நட்சத்திர கூட்டம் பங்கேற்றுள்ளனர். படப்பிடிப்பு நடந்தபோது, ரெட் அலர்ட் வந்து, எப்போது வேண்டுமானாலும் படப்பிடிப்பு நிறுத்தப்படும் என்ற நிலை இருந்தது. ஆனால் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், அவையனைத்தும் முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டு, படக்குழுவினரின் ஒத்துழைப்பால் மட்டுமே, இந்தப் படத்தை, இவ்வளவு விரைவில் முடிக்க முடிந்தது. நடிகர் கௌதம் கார்த்திக் இப்படத்தில் எனக்கு பெரிதும் உறுதுணையாக இருந்து, மிக அர்ப்பணிப்புடன் படத்தை முடித்துக் கொடுத்தார். வெறும் பேச்சுக்காக, நாயகனைப் பாராட்டும் நோக்கில் கூறவில்லை. என் ஆழ்மனதில் இருந்தே கூறுகிறேன்.
அவரது நடிப்பு, பொறுமை, இவை மட்டுமல்லாமல் படப்பிடிப்பில் ஏற்ற இறக்கம் காட்டாமல் அனைவரிடமும் ஒரே மாதிரியாக, மரியாதையுடன் நடந்து கொண்டது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சமீப காலமாக உள்ள நடிகர்களில் இந்த மாதிரியான குணத்தை, இவரைத் தவிர வேறு எந்த நடிகரிடமும் நான் கண்டதில்லை. இந்த குணம் அவரை புகழின் உச்சிக்குக் கொண்டு போகும். நடிகர், இயக்குநர் சேரன் அவர்களின் பங்கேற்பு இந்தப் படத்தினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. இந்தப் படத்தில் அவரது நடிப்பு மிகவும் பிரமாண்டமாக அமைந்திருக்கிறது. இவரது கதாபாத்திரம், ரசிகர்கள் மத்தியில் கண்டிப்பாகத் தனி இடம் பிடிக்கும். நடிகை ஷிவத்மிகா ராஜசேகர் பார்க்கப் பக்கத்து வீட்டுப் பெண்ணை போலவே உள்ளார். அவரது இயல்பான நடிப்பு, இந்த படத்தில் பெரிதும் பேசப்படும். 40-க்கும் மேற்பட்ட நட்சத்திர பட்டாளத்தை ஒன்றிணைத்து, இந்த படத்தை உருவாக்க, பெரிதும் உதவிய இயக்குநர் நந்தா பெரியசாமிக்கு நான் பெரிதும் கடமைப் பட்டுள்ளேன். அவரின் உதவியால் தான் இந்தப் படத்தை இவ்வளவு விரைவில் முடிக்க முடிந்தது" என்றார்.
“ஆனந்தம் விளையாடும் வீடு” படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், படத்தின் ட்ரெய்லர், இசை மற்றும் திரை வெளியீடு குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.