ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'ஜெயிலர்' படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் மலையாளம் மற்றும் கன்னடத்தில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சிவராஜ் குமார், மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மேலும் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதையடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடிக்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். லைகா தயாரிக்கும் இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி வரும் நிலையில், முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இப்படத்தைத் தொடர்ந்து தனது 170வது படமாக 'ஜெய் பீம்' பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. லைகா தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் 2024 ஆம் ஆண்டுக்குள் வெளியாகவுள்ளது. இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாவதாகவும் போலீஸ் கதாபாத்திரத்தில் ரஜினி நடிப்பதாகவும் கூறப்பட்டது. சமீபத்தில் விக்ரமிடம் வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தகவல் வெளியானது. பின்பு விக்ரம் மறுத்துவிட்டதாகப் பேசப்பட்டது.
ஜெயிலர், லால் சலாம் என இரண்டு படங்களிலும் பெரிய ஸ்டார்களான நடிகர்கள் நடித்து வரும் நிலையில் அடுத்ததாக அவர் நடிக்கவுள்ள 170வது படத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடிக்கவுள்ளதாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவர் கமிட்டாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனச் சொல்லப்படுகிறது. இத்தகவல் உண்மையாகும் பட்சத்தில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியும் அமிதாப்பும் இணைந்து நடிக்கவுள்ளனர். இதற்கு முன்பு 1991 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான 'ஹம்' படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.