மகாராஷ்டிரா அரசு சமீபத்தில் வெளியிட்டிருந்த சுற்றறிக்கையில், சின்னத்திரை, தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தொடர்பான படப்பிடிப்பு மற்றும் அதையொட்டிய பணிகளில் 65 வயதுக்கு மேல் இருப்பவர்கள் பணியாற்றக்கூடாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. 65 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு கரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் அரசாங்கம் அப்படி ஒரு விதியை கொண்டு வந்ததாக கூறப்பட்ட நிலையில், இந்த விதியை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து நடிகர் அமிதாப்பச்சன் கருத்து தெரிவித்துள்ளார். அதில்...
"பல கவலைகள் எனது மனதைப் பாதித்துள்ளன. 65 வயதுக்கு மேல் இருப்பவர்கள் வேலைக்கு செல்லக்கூடாது என அரசாங்கம் நிபந்தனை விதித்துள்ளது. என்னைப் போன்றவர்களுக்கு, என் வேலைக்கு, என் 78வது வயதில் மூடுவிழா என்றே நினைக்கிறேன். நாங்கள் இருக்கும் திரைப்பட அமைப்பு இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதன்பிறகு இந்த வயது வரம்பு விதியை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது என்று நினைக்கிறேன். எனவே இப்போதைக்கு 50 வயதுக்கு மேல் உள்ளவர்கள் வேலை செய்வதில் எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் நீதிமன்றம், வழக்குகள் எல்லாம் நீண்ட காலம் செல்லும். எனவே இறுதி முடிவாக என்ன வரும் என்று யோசிக்கிறேன். ஒருவேளை நீதிமன்றத்தில் வயது வரம்புக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால் எனக்கு வேறு ஏதாவது வேலை இருக்கிறதா என்று உத்தேசித்து சொல்ல முடியுமா? " என கேள்வி எழுப்பியுள்ளார்.