பிரபல இந்தி திரைப்பட நடிகை அமீஷா படேல். இவர் இந்தியில், 'ரேஸ் 2', 'ஷார்ட்கட் ரோமியோ' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் விஜய்யுடன் 'புதிய கீதை' படத்தில் நடித்துள்ளார். தற்போது பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடப்பதை முன்னிட்டு, லோக் ஜன சக்தி வேட்பாளர் பிரகாஷ் சந்திரா என்பவருக்கு ஆதரவாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இந்தநிலையில் அவர் பேசும் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. அதில், தான் பீகாரில் பாதுகாப்பற்ற முறையில் உணர்ந்ததாகக் குறிப்பிட்டிருந்தார் அமீஷா படேல். இது தொடர்பாக ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியளித்த அமீஷா படேல், பீகாரில் தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, தான் ஆதரவாகப் பிரச்சாரம் செய்த லோக் ஜனசக்தி வேட்பாளர் பிரகாஷ் சந்திராவையே குற்றஞ்சாட்டியுள்ள அவர், பிரகாஷ் சந்திரா தன்னை மிரட்டியதாகவும், தன்னிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சித்ததாகவும் கூறியள்ளார்.
மேலும், பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு மாலையில் விமானத்தில் செல்ல இருந்ததாகவும், ஆனால் அதில் செல்ல அனுமதிக்காமல் ஒரு கிராமத்தில் வைத்து, நான் சொல்வதைக் கேட்காவிட்டால் இங்கேயே விட்டுச் சென்றுவிடுவேன் என பிரகாஷ் சந்திரா மிரட்டியதாகவும் கூறியுள்ளார். மேலும், பேசியுள்ள அமீஷா, அங்கிருந்து தப்பிக்க மும்பைக்கு வரும்வரை, அவர்களிடம் இணக்கமாக நடந்து கொள்ளவேண்டியிருந்தது எனவும், மும்பைக்கு வந்த பிறகும் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, தன்னை பற்றி உயர்வாகப் பேசவேண்டும் என மிரட்டுவதகவும் கூறியுள்ளார்.
லோக் ஜனசக்தி வேட்பாளர் பிரகாஷ் சந்திரா, இக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். தன் மீது தவறான குற்றசாட்டுகளை சுமத்த, ஜன் அதிகர் கட்சித் தலைவர் பப்பு யாதவிடம் பணம் வங்கியுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், தனக்கு ஆதரவாகப் பேசி வீடியோ வெளியிட, அமீஷா படேல் பத்து லட்சம் கேட்டதாகவும் கூறியுள்ளார். சட்டமன்றத் தேர்தல் நடக்கும் நிலையில், இந்த விவகாரம் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.