![ameer speech at uyir Thamizhukku Movie Press meet](http://image.nakkheeran.in/cdn/farfuture/jsPCMgHhVKPBvO3w7Pp72TkBmcGKBScHsia-SLaeZ3o/1671028389/sites/default/files/inline-images/216_12.jpg)
இயக்குநர் அமீர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க சாந்தினி ஶ்ரீதரன், ஆனந்த்ராஜ், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'உயிர் தமிழுக்கு'. இப்படத்தை ஆதம்பாவா இயக்கி தயாரித்தும் உள்ளார். அரசியல் பின்னணியில் உருவாகும் இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இயக்குநரும் நடிகருமான அமீர் பேசுகையில், “தமிழ் திரையுலகில் மௌனம் பேசியதே படம் மூலம் அடி எடுத்து வைத்து இருபது வருஷம் ஆகிவிட்டது. திரையுலகில் 20 ஆண்டுகள் இருப்பதே ஒரு சாதனைதான். எனது முதல் பத்திரிகையாளர் சந்திப்பின்போது பயந்து பயந்து பேசியது இப்போதும் ஞாபகம் இருக்கிறது. துணிச்சலாகப் பேசுங்கள் என்று கூறியபோது, நான் பேசிய விஷயங்களால் அந்தப் படத்தின் நாயகன் சூர்யா என் மீது கோபப்பட்டு கொஞ்ச நாள் என்னிடம் பேசாமல் இருந்தார்.
இந்தப் படத்தைப் பார்ப்பவர்கள் என் மீதுள்ள தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு படமாக மட்டும் பாருங்கள். இந்தப் படம் மொழியைப் பற்றிப் பேசும் படமே தவிர மொழிப் பிரச்சினையைப் பற்றியது அல்ல. சமீப காலமாக இந்தித் திணிப்பு, வட மாநில மக்களின் வருகை என தமிழ் மொழிக்கு எதிரான அநீதிகள் நடப்பதால் இந்தத் தலைப்பு தற்போது அவசியமாகிறது. நேரடி அரசியலுக்கு வரும் தகுதியை நான் இன்னும் வளர்த்துக் கொள்ளவில்லை. அதே சமயம் அரசியல் பேசிக்கிட்டே இருக்கணும்.
பான் இந்தியா என்கிற கலாச்சாரம் இப்போது வருவதற்கு முன்பே மணிரத்னத்தின் ரோஜா, பம்பாய் ஆகிய படங்கள் அதை சாதித்துக் காட்டிவிட்டன. இந்தியில் இருந்தும் ஷோலே, ஹம் ஆப் கே போன்ற படங்கள் எல்லாம் இங்கே ஒரு வருடம் ஓடின. கிழக்கு சீமையிலே, ஆட்டோகிராப், பருத்தி வீரன், சுப்பிரமணியபுரம் படங்கள் எல்லாம் அந்தந்த மாநிலத்திற்கு ஏற்ற படம். அதனால் பான் இந்தியாவுக்கு என ஒரு படம் எடுப்போம் என்பதே ஒரு பைத்தியக்காரத்தனம்தான். விரைவில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் நான் ஒரு படம் இயக்க உள்ளேன். ஏற்கனவே இறைவன் மிகப் பெரியவன் மற்றும் இன்னொரு படம் கைவசம் இருக்கிறது. அதை முடித்துவிட்டு இந்தப் படத்தை இயக்குவேன்” என்று கூறினார்.