டெல்லியில் போதைப்பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருள்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது.
தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவருக்கும் தொடர்பு உள்ளதாகவும், அவர் போதைப்பொருள் கடத்தல் சம்பவத்திற்கு மூளையாகச் செயல்பட்டதும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய நிலையில், அந்த நபர் திரைப்படத் தயாரிப்பாளரும் தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக் தான் என்பது தெரியவந்தது.மேலும் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து தி.மு.க.-விலிருந்து அவர் நிரந்தரமாக நீக்கப்பட்டார்.
பின்பு தலைமறைவாக இருந்த அவர், கடந்த மாதம் 9-ஆம் தேதி போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் ஜெய்ப்பூரில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடந்த விசாரணையில், ஜாஃபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் மூலம் பெரும் தொகையை சம்பாதித்து, தனது குற்றங்களை மறைக்க திரைப்படங்கள், கட்டுமானம் மற்றும் விருந்தோம்பல் போன்ற பல தொழில்களில் முதலீடு செய்துள்ளதாகவும், தமிழ்நாடு திரைத்துறை சார்ந்த பிரபலங்களுக்கும் தொடர்பிருப்பதாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதையடுத்து ஜாபர் சாதிக்கை சென்னைக்கு வரவழைத்து, 12 மணி நேரம் விசாரணை நடத்தினர் அதிகாரிகள். அதில் பல்வேறு தகவல்கள் அதிகாரிகளிடம் ஜாபர் சாதிக் சொன்னதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே திருச்சியைச் சேர்ந்த சதானந்தம் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாபர் சாதிக் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையாகத் திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் அமீர், டெல்லியில் உள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நாளை (02.04.2024) ஆஜராகி விளக்கமளிக்குமாறு சம்மன் அனுப்பப்பட்டது. மேலும் ஜாபர் சாதிக்கின் தொழில் பங்குதாரர்களான அப்துல் பாசித் புகாரி, சையத் இப்ராஹிம் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது.
இதனைத் தொடர்ந்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு அனுப்பியுள்ள சம்மன் குறித்து ஒரு ஆடியோ வெளியிட்ட அமீர், விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார். மேலும் தன் தரப்பு நியாயத்தை சொல்வதாகவும் 100 சதவீதம் இறைவன் அருளால் வெற்றியோடு வருவேன் எனவும் கூறியிருந்தார். இதையடுத்து அமீர் விசாரணைக்கு ஆஜராக கால அவகாசம் கேட்டுள்ளதாக தகவல் வெளியானது. ரம்ஜான் பண்டிகைக்கு பிறகு விசாரணைக்கு அழைக்குமாறு மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு மின்னஞ்சல் மூலம் அமீர் கடிதம் எழுதியுள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் கால அவகாசம் கேட்ட தகவலை அமீர் மறுத்துள்ளார். ஒரு தனியார் தொலைக்காட்ச்சிக்கு விளக்கமளித்துள்ள அமீர், போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு தான் மின்னஞ்சல் ஏதும் அனுப்பவில்லை என்றும் அவர்கள் ஆஜராக சொன்னது போல் நாளை டெல்லியில் ஆஜராகவுள்ளதாகவும் கூறியுள்ளார்.