இயக்குநர் மற்றும் நடிகரான் அமீர் தற்போது இறைவன் மிகப் பெரியவன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதனிடையே நிறைய நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார். மேலும் தனது அரசியல் ரீதியான கருத்துக்களையும், முன் வைத்து வருகிறர். அந்த வகையில் திருச்சியில் ஒரு கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.
பின்பு செய்தியாளர்களைச் சந்தித்தவர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அவர் பதிலளிக்கையில், “இப்போது உள்ள நெருக்கடிக்கு நான் அரசியலுக்கு வந்தாலும் வரலாம் என்று என் உள்ளுணர்வு சொல்கிறது. திராவிடம் என்ற சொல்லின் அர்த்தத்தைத் தெரிந்துகொண்டால்தான் அது நமக்கு வேண்டுமா? வேண்டாமா? எனத் தெரியும். ஆரியத்திற்கு எதிரான சொல்தான் திராவிடம். அது மண் சார்ந்து நம் இரத்தத்திலே இருக்கிறது. அதனால் எல்லோருமே திராவிடர்கள்தான், திராவிடச் சிந்தனை உடையவர்கள்தான். பாசிசத்திற்கு எதிராக யார் அரசியல் செய்தாலும் அது திராவிட அரசியல்தான். அதற்கு பெயர் மாற்றமாக தமிழ்த்தேசியம் என்றும் வேறு எதாவது சொல்லலாமே தவிர பாசிசத்திற்கும், ஆரியத்திற்கும் எதிராக செய்யக்கூடிய அரசியல் திராவிட அரசியல்தான். அது திராவிடம் என்ற பெயருள்ள கட்சிகள் செய்தால்தான் என்று மட்டும் இல்லை. அது இல்லாத கட்சிகளுக்கும் அதுதான் அடையாளம்” என்றார்.
பின்பு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், “ஒரு வெள்ளையான வேஷ்டியில் நான்கு, ஐந்து கரைகள் இருந்தால் நம் கண்ணுக்குத் தெரியும். அதுபோலத்தான் சட்ட ஒழுங்கு, அதைப் பொறுத்தவரை மற்ற மாநிலங்களைவிட இங்குச் சரியாகத்தான் உள்ளது. எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சிகளுக்கு எதிராக அரசியல் செய்ய வேண்டும் என நினைக்கும் போது சட்ட ஒழுங்கைதான் கையில் எடுக்க முடியும். மக்கள் தொடர்ச்சியாக 10 தேர்தலில் தி.மு.க.விற்கு வெற்றியைக் கொடுத்து வருகின்றனர். அதனால் எதிர்க்கட்சிகளுக்கு ஏதாவது சொல்லுவதற்கு வேண்டும் என்று ஏதாவது ஒரு மரணம், கொலை, வழிப்பறி என எதையாவது பேசித்தான் ஆகவேண்டும். இது எல்லாமே அவர்கள் செய்யும் அரசியல் அவ்வளவுதான்” என்றார்.
பின்பு அரசியல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “விஜய்யின் அரசியல் கட்சிக்கு வாழ்த்து சொல்லிவிட்டேன், அவர் என்னை அழைத்தால் கண்டிப்பாகப் போவேன். சீமானும், விஜய்யும் இணைந்து செயல்பட்டால் சந்தோஷம்தான். 2024 பட்ஜெட்டில் தமிழ்நாட்டை நிராகரித்ததைவிட அதற்கு ஆதரவு தெரிவிக்கும் அரசியல் தலைவர்களை நினைத்தால் வருத்தமாக உள்ளது. வாக்களித்தவர்கள் மற்றும் வாக்களிக்காதவர்களுக்கும் அரசு ஒன்றுதான். அதனால், எல்லா மாநிலங்களையும் சமமாகப் பார்க்க வேண்டும்” என்றார். ஜாபர் சாதிக் வழக்கு குறித்து கேள்வி கேட்கப்பட்ட நிலையில், “அந்த வழக்கில் நீதியரசர் முழுமையான முகாந்திரம் இல்லை எனச் சொல்லி இருக்கிறார், அவ்வளவுதான் அந்த வழக்கைப் பற்றித் எனக்கு தெரியும் ” என்று கூறியுள்ளார்.