'இயற்கை', 'ஈ', 'பேராண்மை', 'புறம்போக்கு என்கிற பொதுவுடமை' உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமடைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன், நேற்று (11.03.2021) மயங்கிய நிலையில் வீட்டில் காணப்பட்டார். உடன் இருந்தவர்கள் அவரை மீட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி.ஜனநாதன், மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். இதையடுத்து அவர் மரணமடைந்துவிட்டதாக தற்போது சமூக வலைதளங்களில் தகவல் பரவிவருகிறது. இந்நிலையில் இதுகுறித்து, அப்பல்லோ மருத்துவர்களிடம் நாம் விசாரித்தபோது, "ஜனநாதனின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அதேநேரத்தில், தீவிர அறுவை சிகிச்சை செய்யலாமா என்று மூளை அறுவை சிகிச்சை நிபுணர் சீனிவாசன் பரமசிவம் தலைமையிலான டாக்டர்கள் ஆலோசித்துக் கொண்டிருக்கிறார்கள்” என விளக்கம் அளித்தனர்.
இந்நிலையில், இயக்குனர் அமீர் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்... "மரியாதைக்குரிய பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் ஊடக நண்பர்களுக்கு, அன்பும் அறிவும் நிறைந்த அண்ணன் இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் அவர்களுக்கு நேற்றைய தினம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தினால், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே, உறுதி செய்யப்படாத தகவல்களை யாரும் பகிர வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.