டெல்லியில் போதைப்பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த மாத 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருள்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது.
தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவருக்கும் தொடர்பு உள்ளதாகவும், அவர் போதைப்பொருள் கடத்தல் சம்பவத்திற்கு மூளையாகச் செயல்பட்டதும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய நிலையில், அந்த நபர் திரைப்படத் தயாரிப்பாளரும் தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக்தான் என்பது தெரியவந்தது. மேலும் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து தி.மு.க. சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் கட்சியிலிருந்து அவரை நிரந்தரமாக நீக்குவதாக தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அறிவித்திருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக இயக்குநரும் நடிகருமான அமீர் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த 2 நாட்களாக எனது ‘இறைவன் மிகப் பெரியவன்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜாஃபர் குறித்து வரும் செய்திகள் அனைத்தும் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த 22 ஆம் தேதி நான் ‘இறைவன் மிகப் பெரியவன்’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருந்தபோது, திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஏன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது? என்னைச் சுற்றி என்ன நடக்கிறது? என்பதை ஊடகங்கள் வாயிலாகவே நான் அறிந்து கொண்டேன். உண்மை எதுவென்று இப்போது வரை எனக்குத் தெரியவில்லை. எதுவாயினும், செய்திகளில் வரும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்குமேயானால் அது கண்டிக்கப்பட வேண்டியதும் தண்டிக்கப்பட வேண்டியதுமே” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் வீடியோ வெளியிட்ட அவர், “என்னுடைய இறைவன் மிகப் பெரியவன் திரைப்பட தயாரிப்பாளர் ஜாஃபர் குறித்த என்னுடைய நிலைப்பாட்டை நான் தெள்ளத் தெளிவாக விளக்கிய பிறகும், என் மீது பேரன்பு கொண்ட சில ஊடகவியலாளர்களும் நண்பர்களும் சமூக வலைதளப் பக்கங்களிலும் ஊடகங்களிலும் குற்றச்செயலோடு என்னை தொடர்புப்படுத்தி வீடியோக்கள் வெளியிடுவதை பார்க்க முடிகிறது. அவர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அடிப்படையாகவே மது, விபச்சாரம், வட்டி இதுபோன்ற விஷயங்களுக்கு எதிரான சித்தாந்தத்தையும் மார்க்கத்தையும் கும்பிடக் கூடியவன் நான். அப்படி இருக்கையில் இதுபோன்ற ஒரு குற்றச்செயலில் என்னை தொடர்புப்படுத்தி பேசுவது என்பது எனது பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த முடியுமே தவிர அல்லது என் குடும்பத்தினருக்கு மன உளைச்சலை ஏற்படுத்த முடியுமே தவிர வேற எந்த பயனையும் நீங்கள் அடைந்து விட முடியாது. நீங்கள் சொல்கின்ற அனைத்து குற்றச்சாட்டுகளையும் விசாரிப்பதற்கு காவல்துறை அதிகாரிகள் இருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்கள் எப்போது என்னை அழைத்தாலும் விசாரணைக்கு தயாராகவே இருக்கிறேன். இந்த சோதனையான காலகட்டத்தில் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. இறைவன் மிகப் பெரியவன்” எனப் பேசியுள்ளார்.