தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வரும் அமலா பால், சமீபகாலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் அறிமுக இயக்குநர் கே.ஆர்.வினோத் இயக்கத்தில் ‘அதோ அந்த பறவை போல’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஆஷிஷ் வித்யார்த்தி, சமீர் கோச்சார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ்' சார்பில் ஜோன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் ‘அதோ அந்த பறவை போல’ படத்தின் தென்னிந்திய திரையரங்கு வெளியீட்டு உரிமையை 'வி ஸ்கொயர் என்டர்டெயின்மென்ட்' நிறுவனம் வாங்கியுள்ளது. இதனை அதிகாரபூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில் கோடையில் இப்படம் திரையரங்கில் வெளியாகும் என குறிப்பிட்டிருக்கிறது. விரைவில் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.