‘ஆடு ஜீவிதம்’ திரைப்படத்திற்கு பிறகு தற்போது மலையாளத்தில் அமலா பால் நடித்துள்ள திரைப்படம் ‘லெவல் க்ராஸ்’. இப்படத்தை அர்ஃபாஸ் அயூப் இயக்கியுள்ளார். அதில் ஆசிப் அலி, ஷரஃப் யு தீன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரமேஷ்.பி பிள்ளை தயாரித்துள்ள இப்படம் இன்று (26.07.2024) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தின் புரொமோஷன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்று முடிந்தது.
அந்நிகழ்ச்சியில் அமலா பால், ஷரஃப் யு தீன், ஆசிப் அலி உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். அப்போது அமலா பால், மாணவர்கள் மத்தியில் ஆடி, பாடி இப்படம் குறித்த அனுபவங்களை பகிர்ந்திருந்தார். அது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. அதில் அமலா பால் கவர்ச்சியாக உடை அணிந்ததாக சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சனம் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து படக்குழு நடத்திய பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில், ஆடை குறித்த எதிர்மறையான விமர்சனத்திற்கு அமலா பால் பதில் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில் “என் வசதிக்கு ஏற்ப ஆடை எதுவோ அதைத்தான் அணிந்திருந்தேன், அதில் எந்தவித குழப்பமும் இல்லை, அதை கேமராக்களில் காட்சிப்படுத்திய விதத்தில்தான் பிரச்சனை உள்ளது. ஆனால், நான் அணிந்திருந்த ஆடையில் எனக்கு ஒன்றும் தவறாகத் தெரியவில்லை. நான் மாணவர்களிடம் கூட நீங்கள் நீங்களாகவே இருங்கள் என்றுதான் சொல்லுவேன். அதனால் எனக்கு என்ன பிடித்திருந்ததோ அதைத்தான் நான் அணிந்திருந்தேன். சேலை, சுடிதார் என எது அணிந்திருந்தாலும் அதை எப்படி வேண்டுமானாலும் காட்சிப்படுத்தலாம். அது நம்ம கட்டுப்பாட்டில் இல்லை, அதனால் இது போன்ற விஷயங்களில் நான் பெரிதாகக் கவனம் செலுத்துவதில்லை” என்றார்.