Skip to main content

ஆலியா பட் திரைப்படத்திற்கு மத ரீதியாக உருவாகியிருக்கும் சர்ச்சை...

Published on 11/07/2020 | Edited on 11/07/2020

 

pooja bhatt

 

மகேஷ் பாட் இயக்கத்தில் 1991ஆம் ஆண்டு உருவான படம் 'சடக்'. இத்தனை வருடங்களுக்குப் பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகிறது.

 

இந்தப் படத்தை மகேஷ் பாட் இயக்க அவருடைய இரு மகள்களான பூஜா பாட் மற்றும் ஆலியா பாட் இருவரும் நடித்திருக்கின்றனர். மேலும் ஆதித்யராய் கபூர் உள்ளிட்ட பல்வேறு வாரிசு நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.

 

பாலிவுட் நெபோடிஸம்தான் சுசாந்த் மரணத்திற்குக் காரணம் எனத் தற்போது இணையத்தில் பேசப்பட்டு வருகிறது. அதனால் வாரிசு நடிகர்களின் படங்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று பலரும் திட்டவட்டமாகத் தெரிவித்து வருகின்றனர். அந்த லிஸ்ட்டில் இப்படமும் முதன்மை வகிக்கின்றது.

 

இந்நிலையில் இப்படத்தின் போஸ்டரில் கைலாய மலை எனப்படும் மானசரோவர் மலையின் புகைப்படம் இடம்பெற்றிருப்பது, இந்துக்களின் மனதை அது புண்படுத்தும் விதமாக இருக்கிறது என உத்தரப் பிரதேச மாநிலம் மஹராஜ்கன்ஜ் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

 

வழக்கை விசாரித்த நீதிபதி ஷவுரப் பாண்டே வரும் செப்டம்பர் மாதம் 8ஆம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்திவைத்துள்ளார்.

 

வழக்கைத் தொடர்ந்த வினய் பாண்டே இது குறித்து கூறுகையில், ‘சடக் 2’ படத்தின் போஸ்டரில் இந்துக்களின் கடவுளான சிவன் வசிக்கும் கைலாஷ் மானசரோவர் மலையின் படம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, படத்தின் பெயரும், படத்தின் நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர் ஆகியோரின் பெயர்களும் மலைக்கு மேலே எழுதப்பட்டுள்ளன. அந்தப் புனிதமான மலையை விட அவர்களின் பெயர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இது இந்துக்களின் மனதைப் புண்படுத்துவதாக உள்ளது” என்றார். 

 


 

சார்ந்த செய்திகள்