மதராசபட்டினம், தெய்வத்திருமகள், தலைவா உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கி பிரபலமானவர் ஏ.எல் விஜய். இப்போது அருண் விஜய்யை வைத்து 'மிஷன் சாப்டர் 1- அச்சம் என்பது இல்லையே' படத்தை இயக்கியுள்ளார். இப்படம் அடுத்த மாதமான பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளது. மேலும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் 'தி மெட்ராஸ் மர்டர்' வெப் சீரிஸில் ஷோ-ரன்னராக பணியாற்றுகிறார்.
இந்த நிலையில் ஏ.எல் விஜய், தனது மேலாளர் மணிவர்மா மற்றும் உதவி இயக்குநர்களுடன் சென்னை தியாகராய நகர் ஹபிபுல்லா சாலை வழியாக படப்பிடிப்பிற்கு காரில் சென்றுள்ளார். அப்போது ஒரு இளைஞர் விஜய்யின் காரில் இடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதோடு கையில் வைத்திருந்த ஹெல்மெட்டால் காரை அடித்துள்ளார். மேலும் ஏ.எல் விஜய் மற்றும் அவரது மேலாளர் மணிவர்மாவை தாக்க முயன்றுள்ளார். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகியது. இதனால் ஏ.எல். விஜய், காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
பின்பு சம்பவ இடத்திற்கு தேனாம்பேட்டை போலீசார் விரைந்தனர். போலீசாரை பார்த்த அந்த இளைஞர் ஓடிவிட்டார். இதையடுத்து ஏ.எல் விஜய் தரப்பு புகார் கொடுத்துள்ளனர். அதை பெற்று கொண்ட போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், அரும்பாக்கத்தை சேர்ந்த ஐசக் என்பது தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், அந்த இளைஞர் போதையில் இருந்ததாக தெரிவித்தார்.