கரோனா வைரஸ் தொற்று உலகையே நாளுக்கு நாள் அச்சுறுத்தி வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவத் தொடங்கிய இந்த வைரஸானது தற்போது உலகம் முழுக்க 190 நாடுகளில் பரவியுள்ளது.
அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஸ்பெயின் போன்ற வளர்ந்த நாடுகள் கூட இந்த நோயின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நோயை தடுக்க தற்போது எந்த தடுப்பு மருந்தும் இல்லை என்பதால் நோயின் தாக்கத்திலிருந்து தப்பிக்க வீட்டை விட்டு மக்கள் வெளியேற வேண்டாம் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு இந்தியாவில் மட்டுமில்லை, உலக நாடுகள் பல இந்த உத்தரவைதான் தற்போது கரோனா பாதிப்பிலிருந்து தப்பிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுத்து வருகிறது. இதனை தொடர்ந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இந்தியா முழுவதும் வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை அமல் படுத்தியுள்ளார்.
இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதன் அவசியம் புரியாமல் வெளியே உலாவிக்கொண்டிருக்கும் மக்களுக்கு அறிவுரை கூறும் வகையில் ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''உங்களுக்கு அறிவில்லையா? ஊரடங்கு என்பதன் அர்த்தம் உங்களுக்குப் புரியவில்லையா? துணிச்சலான போர் வீரனைப் போல தெருவில் இறங்கி நடக்கவேண்டாம். நீங்களும் உங்கள் குடும்பமும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் உங்கள் துணிச்சல் எல்லாம் காணாமல் போய்விடும். யாருமே உயிரோடு இருக்க முடியாது.
என்னுடைய படங்களில் நான் உயரமான கட்டிடங்களிலும் ஹெலிகாப்டர்களிலும் தொங்கியிருக்கிறேன். இன்றைக்கு நம் அனைவரது வாழ்க்கையும் அப்படித்தான் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. இது எளிதாகக் கடந்து போக வேண்டிய விஷயமல்ல. இது விளையாட்டல்ல. வீட்டை விட்டு வெளியேறாமல் உங்கள் குடும்பத்துக்கு ஒரு ஹீரோவாக இருங்கள். அரசாங்கள் சொல்லும் வரை வீட்டுக்குள்ளேயே இருங்கள்.
வீட்டுக்குள்ளேயே இருப்பதன் மூலம்தான் வைரஸுக்கு எதிரான இந்தப் போரில் நாம் ஜெயிக்க முடியும். முட்டாளாக இல்லாமல், இந்தப் போரில் ஒரு கில்லாடியாக செயல்படுங்கள்'' என்று தெரிவித்துள்ளார்.