பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சந்திரமுகி 2'. இப்படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத், வடிவேலு மற்றும் ராதிகா நடித்துள்ளார்கள். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில் வருகிற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகவுள்ளது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்துள்ளது. முன்னதாக 'ஸ்வாகதாஞ்சலி' மற்றும் 'மோருனியே' பாடல் வெளியான நிலையில் நேற்று அனைத்து பாடல்களையும் படக்குழு வெளியிட்டது. இவ்விழாவில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டு பேசினர்.
இந்நிலையில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துப் பேசினார். மேலும் லாரன்ஸ் அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி நிதி வழங்கினார். இதனிடையே அவர் தயாரிப்பில் உருவாகும் அஜித்தின் 62வது படமான விடாமுயற்சி படம் குறித்துப் பேசினார். "இப்படம் எங்களது பெருமைமிகு படமாக இருக்கும். விரைவில் படப்பிடிப்பு தொடங்கும். இப்படம் கைவிடப்படவில்லை" என்றார்.
இப்படத்தின் அறிவிப்பு கடந்த மே 1 அன்று வெளியான நிலையில் இன்னும் படப்பிடிப்பு தொடங்கவில்லை. மகிழ் திருமேனி இயக்கவுள்ள இப்படம், டிராப் செய்யப்பட்டதாக அண்மையில் ஒரு தகவல் உலா வந்தது. இந்நிலையில் சுபாஸ்கரன் அதற்கு தற்போது விளக்கமளித்து முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.