‘தளபதி 63’ படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, அட்லீ இயக்குகிறார். 'பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம் பிரபலம் அடைந்த கதிர், யோகி பாபு, டேனியல் பாலாஜி ஆகியோர் நடிக்கின்றனர். படத்தின் கதாநாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்தப் படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜை பிரமாண்டமாக போடப்பட்டு, ஷூட்டிங் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ஷூட்டிங் பின்னி மில்லில் நடைபெற்று வந்தது. இதை அறிந்த விஜய் ரசிகர்கள் பின்னி மில் முழுவதும் சூழ்ந்துவிட்டனர். நூறுக்கும் மேற்பட்ட ரசிகர்களை நேரில் வந்து பார்த்து, கை காட்டினார் நடிகர் விஜய். இதனை அடுத்து பின்னி மில்லில் ரசிகர்களின் கூட்டத்தினால், தற்போது ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக நடிகர் அஜித் இதுபோன்ற தடைகளை யோசித்துதான் தமிழக சப்ஜெட்டாக இருந்தாலும், ஆந்திராவிலுள்ள ராமோஜிராவ் ஸ்டூடியோவில் செட் போட்டு எடுத்து முடிக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார். 'வீரம்' படத்தில் கதைக்களம் ஒட்டன்சத்திரம் என்று வந்தாலும், படமாக்கப்பட்டது ஆந்திராவில்தான். இதே நிலைதான் வேதாளம், விவேகம், தற்போது வெளியாகியுள்ள விஸ்வாசம் வரை. வீரத்தை தொடர்ந்து அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தின் பல காட்சிகள் சென்னையிலேயே எடுக்கப்பட்டது. ஆனால், ரசிகர்களின் அன்புத் தொல்லைகளை சகித்துக்கொண்டுதான் நடைபெற்றது. அந்தப் படத்தில் நடித்த அருண் விஜய் ஒரு பேட்டியில், 'நானும் அஜித்தும் ஷூட்டிங் இடைவேளையில் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அஜித் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். சிலர் அஜித் ரசிகர்கள் மிகவும் முரட்டுத்தனமாக நடந்துகொள்கிறார்கள் என்று அஜித்திடம் சொன்னார்கள். அதற்கு அவர், என் ரசிகர்கள் அப்படியெல்லாம் நடந்துகொள்ள மாட்டார்கள் என்றார். மேலும் அவர்களை அமைதியாக வைத்துக்கொள்ள தானே அந்த இடத்திற்கு சென்று அமைதியாக இருக்குமாறு கையசைத்தார். உடனடியாக அவரின் ரசிகர்கள் அமைதியானார்கள்' என்று கூறினார் அருண் விஜய்.
இப்போதெல்லாம் பெரிய நட்சத்திரங்களின் படங்கள் பொதுவெளியில் எடுக்க வேண்டும் என்றால் நள்ளிரவிலோ அல்லது திடீரென வந்து யாருக்கும் தெரியாமல் எடுத்துவிட்டு செல்கிறார்கள். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்கார் படத்தில் இப்படியும் சில காட்சிகள் படமாக எடுக்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்பு வெளியான மெர்சல் திரைப்படத்தில் மதுரையில் நடக்கும் பகுதி முழுவதும் செட் போட்டு எடுக்கப்பட்டது. 'பேட்ட' படத்தின் மதுரை காட்சிகளும் சென்னைக்கு அருகில் செட் போட்டு படமாக்கப்பட்டவையே.
அதே நேரம் சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு விழாவில் மன்சூர் அலிகான் பேசும்போது, "அஜித் மிகவும் நல்ல மனிதர்தான். தமிழ்நாட்டில் அதிக ரசிகர்கள் அவருக்குதான் இருக்கிறார்கள். ஆனால், அவர் தன் படத்தின் ஷூட்டிங்கையெல்லாம் வெளியூரில் வைக்கிறார். இதனால் வெளியூர் தொழிலாளர்கள்தான் பயனடைகிறார்கள். தமிழ் சினிமா தொழிலாளர்கள் வேலைவாய்ப்பையிழக்கிறார்கள். அவர் தமிழ்நாட்டில் தன் ஷூட்டிங்கை நடத்த வேண்டும்" என்று பேசினார். இப்படியும் ஒரு கருத்து இருக்கிறது. இருந்தாலும் தயாரிப்பு நிறுவனங்கள் ரசிகர்களின் அன்புத்தொல்லையில்லாமல் சுமூகமாக படப்பிடிப்பை நடத்தவே விரும்புகிறார்கள்.
தற்போது விஜய்க்கும் அஜித்துக்கும் தமிழ்நாட்டில் எக்கச்சக்க ரசிகர்கள் இருப்பதுபோல, ரஜினிக்கு வெளிநாடுகளில் மவுசு உண்டு. கபாலி திரைப்படம் மலேசியாவில் எடுக்கப்பட்டபோது அங்கும் இதே கஷ்டத்தை படக்குழுவினர் அனுபவித்தார்கள். விஜய், அஜித் தங்களின் படபிடிப்புகளை இதுபோல செட்களிலும், வெளிமாநிலங்களிலும் எடுப்பதற்கு முன்னோடியாக இருந்தவர் ரஜினிதான். ரஜினி முத்து, அருணாச்சலம், படையப்பா காலத்திலிருந்தே கிராமப்புற படப்பிடிப்பு என்றால் மைசூர், மாண்டியா பகுதிகளில்தான் நடக்கும். மக்கள் செல்வன் என்று பெயரெடுத்த விஜய் சேதுபதி அவருக்கு எங்கு ஷூட்டிங் வைத்தாலும் மக்கள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டு தவிக்கிறார். தற்போது ஆலப்புழாவில் நடந்துவரும் 'மாமனிதன்' படப்பிடிப்பில் கேரள ரசிகர்கள் அவரை கொண்டாடித் திண்டாட வைக்கின்றனர். '96' மலையாள வெர்ஷனின் வெற்றி எஃபக்ட் இது. போகிற போக்கை பார்த்தால் தமிழ்நாட்டில் பெரிய நட்சத்திரங்களின் படங்களின் ஷூட்டிங்கே வைக்க முடியாதுபோல...