ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ஃபர்ஹானா'. இப்படத்தில் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்துக்கு செல்வராகவன், கார்த்தி உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் படக்குழுவினரைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக ஒரு நேர்காணலில் தெலுங்கு சினிமா குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியிருந்தார். அதில், "எனக்கு தெலுங்கு திரையுலகம் பிடிக்கும். ஆனால் மீண்டும் ஒரு நல்ல தெலுங்கு படத்தில் நடிக்க விரும்புகிறேன். நல்ல கதாபாத்திரங்களை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். புஷ்பா படத்தில் ராஷ்மிகாவின் ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் எனக்கு பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். அந்த வாய்ப்பு எனக்கு வந்திருந்தால் கண்டிப்பாக நான் நடித்திருப்பேன். ராஷ்மிகா ஸ்ரீவள்ளியாக நன்றாக நடித்திருந்தார். ஆனால் நான் அந்த கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக இருப்பேன் என நம்புகிறேன்" என்றார்.
இதையடுத்து ராஷ்மிகாவை விட நான் நன்றாக நடிப்பேன் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாயின. இந்நிலையில் தான் பேசியது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாக அறிக்கை வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது: "அண்மையில் ஒரு நேர்காணலின்போது என்னிடம், ‘தெலுங்கு திரையுலகில் நான் எந்த மாதிரியான வேடங்களில் நடிக்க விரும்புகிறேன்?' என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளிக்கையில், எனக்கு தெலுங்கு திரையுலகம் மிகவும் பிடிக்கும். எனக்கு விருப்பமான கதாபாத்திரங்கள் கிடைத்தால் நிச்சயமாக தெலுங்கு படங்களில் நடிப்பேன். உதாரணத்திற்கு புஷ்பாவில் வரும் ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும் என பதிலளித்தேன். இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக என்னுடைய பதில் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. புஷ்பா படத்தில் நடித்த நடிகை ரஷ்மிகா மந்தனாவின் கடின உழைப்பை நான் ஒரு போதும் குறை கூறவில்லை. இதனால் ஏற்பட்ட குழப்பத்தை நீக்குவதற்காக இந்த விளக்கத்தை அளிக்கிறேன்."