லத்தி' படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் 'மார்க் ஆண்டனி' படத்தில் நடித்து வருகிறார் விஷால். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்க, வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்கிறார். வினோத் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
இப்படத்தில் தெலுங்கு நடிகர் சுனில், நடிகை அபிநயா, மலேசிய நடிகர் டிஎஸ்ஜி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு லாரி சம்பந்தப்பட்ட ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில் டம்மி லாரியை வைத்து படமாக்கி வந்தனர். அந்த லாரி எதிர்பாராத விதமாக அருகில் உள்ள சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. பின்பு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்துள்ளதாகச் சொல்லப்படும் நிலையில் "சில நொடிகளில் வாழ்க்கையை தவறவிட்டிருப்பேன்" என விஷால் பதிவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து மீண்டும் அதே ஸ்டூடியோவில் படப்பிடிப்பு தொடங்கி வருகிறது. இந்த நிலையில் மீண்டும் அங்கு விபத்துக்கு நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் லைட் மேனாக வேலை செய்து வந்த முருகன் என்பவர் வேலை செய்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக லைட் கம்பம் அவர் மேல் விழுந்து நெற்றியில் காயம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. உடனே அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்றதை அடுத்து வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.
இதே போல் விஷாலின் முந்தைய படமான லத்தி படத்திலும் விஷாலுக்கு இரண்டு முறை பலத்த காயம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த படத்திலும் விபத்து நடந்துள்ளது படப்பிடிப்பு தளத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.