
பிரபாஸ் நடிப்பில் ஓம் ராவத் இயக்கத்தில் கடந்த 16 ஆம் தேதி 3டியில் வெளியான படம் ‘ஆதிபுருஷ்’. ராமாயணத்தின் ஒரு பகுதியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்திலும், க்ரீத்தி சனோன் சீதை கதாபாத்திரத்திலும், சையிஃப் அலிகான் ராவணன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இப்படம் மோசமான வரவேற்பைப் பெற்ற நிலையில் வசூலில் இதுவரை உலகம் முழுவதும் ரூ.410 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்படம் ரிலீசுக்கு முன்பே இந்து மத உணர்வைப் புண்படுத்தியதாகப் பல்வேறு சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் ரிலீசுக்கு பின்பும் அது தொடர்கிறது. இப்படத்தை உடனடியாகத் தடை செய்யக் கோரி அகில இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் (All India Cine Workers Association) பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியது.
இதைத் தொடர்ந்து தற்போது உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் அகில இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. அதில், "இப்படம் இந்து மத உணர்வைப் புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. தயாரிப்பாளர் லாபம் பார்ப்பதற்காக டிக்கெட் விலையில் தள்ளுபடி செய்கிறார்கள். இப்படத்தின் தயாரிப்பாளர், எழுத்தாளர் மற்றும் இயக்குநர் அனைவரும் ராமாயணத்தின் நம்பிக்கையைத் தவறாகச் சித்தரித்துள்ளனர். மேலும் ராமாயணத்தை திரித்து கேலி செய்துள்ளனர். எனவே இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.