இந்தியாவில் குறைந்து வந்த கரோனா பரவல் தற்போது மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. தொற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்த அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் தொற்று எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, நாட்டில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக கரோனாவிற்குத் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல நடிகை ஷோபனாவுக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில்," முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இருந்தபோதிலும், கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. உடல் வலி, சோர்வு, நடுக்கம் ,தொண்டை கரகரப்பு போன்ற அறிகுறிகள் முதல் நாளே அதிகமாக இருந்த நிலையில் அது தற்போது படிப்படியாக குறைய தொடங்கியது. தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்டது எனக்கு மகிழ்ச்சி. அது கரோனா பாதிப்பில் இருந்து 85 சதவீதம் பாதுகாப்பை அளிக்கிறது. அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இந்த கரோனா தொற்று ஒமிக்ரானுடன் முடிவுக்கு வர பிரார்த்திக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
நடிகை ஷோபனா 1980 மற்றும் 90களில் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்துள்ளார். இவர் தமிழில், 'இது நம்ம ஆளு', 'எனக்குள் ஒருவன்', 'பொன்மனச் செம்மல்', 'தளபதி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.