மணிப்பூரில் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி குக்கி பழங்குடியின பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர் கும்பல் ஒன்று ஆடைகளைக் களைந்து இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், நாட்டையே உலுக்கியுள்ள இச்சம்பவம் நடந்து 77 நாட்கள் ஆன பிறகே வெளி உலகிற்குத் தெரியவந்துள்ளது. இந்தக் கொடூர சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர், மனித உரிமை ஆர்வலர்கள் எனப் பலரும் தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகை ரோகிணி கூறுகையில், "ஒட்டுமொத்த நாடும் வெட்கப்படுற மாதிரி ஒரு விஷயத்தை பண்ணி வச்சிருக்காங்க. ஒரு பெண்ணுடைய உடலை ஆடை இல்லாமல் செய்து ஊர்வலமாக கொண்டு போய் வன்புணர்வு செய்துள்ள செயல், நமக்கெல்லாருக்குமே வெட்கக்கேடு. இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அதுக்குமேல வெட்கக்கேடு. 77 நாட்கள் முடிந்த பிறகுதான் பிரதமரே வாய் திறக்கிறார். இதை மக்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். நம்ம சமூகத்துல பெண்ணின் உடல் மேல குடும்ப கௌரவத்தையும் சமூக மரியாதையையும் புகுத்தி வைத்துள்ளதால்தான் இப்படி பண்ணத் தோணுது.
அவமானச் சின்னங்களாக பெண்களின் உடலை உருவாக்கி வைத்திருப்பது நம்ம சமூகம்தான். இதுபோன்ற பார்வை எப்போது கலைகிறதோ அப்போதுதான் பெண்களுக்கு விடுதலை. அதற்கு முன்னாடி, இதுபோன்ற குற்றங்கள் நடக்கும்போது உடனடியாக போய் நிற்க வேண்டிய போலீஸே வேடிக்கை பார்த்திருக்காங்க... என்று அந்த பெண் சொல்லியிருக்கு. இது எந்த அளவுக்கு நியாயம் என்பதைப் பிரதமர் சொல்ல வேண்டியிருக்கு. அந்த மாநிலத்தின் முதல்வர் பதில் சொல்ல வேண்டியிருக்கு" என்றார்.