மாடல் அழகியும், நடிகையுமான மீரா மிதுன் சில மாதங்களுக்கு முன்பு பட்டியலினத்தவர் குறித்து அவதூறாகப் பேசி வீடியோ வெளியிட்டார். அது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மீரா மிதுன் மீது காவல்துறையில் புகார் அளித்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக மீரா மிதுனும் அவரது நண்பர் சாம் அபிஷேக்கும் கைது செய்யப்பட்டு பின்பு நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
பின்பு இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது மீரா மிதுன் ஆஜராகாததால் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்பு அடுத்த கட்ட விசாரணையில், நீதிமன்ற உத்தரவின்படி மீரா மிதுனை வேளச்சேரி மற்றும் சேத்துப்பட்டில் தேடியும் கிடைக்கவில்லை. விரைவில் மீரா மிதுனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் வழக்கு விசாரணை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டது.
இதையடுத்து நடந்த விசாரணையில் நடிகை மீரா மிதுன் தலைமறைவாகி அடிக்கடி தங்குமிடத்தை மாற்றி வருவதால் அவரை கைது செய்ய முடியவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் மீரா மிதுன் தலைமறைவான நிலையில் அவரது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 2 மாதங்களுக்கு மேலாக பிடிவாரண்ட் நிலுவையில் உள்ள நிலையில் கைது செய்யாததால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து மீரா மிதுன் தலைமறைவாக இருந்து வரும் நிலையில் அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே கடந்த ஆகஸ்ட் மாதம் மீரா மிதுனின் தாயார் தனது மகளைக் கண்டுபிடித்து தர வேண்டும் என புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.