பிரிட்டிஷ் நடிகையான பனிதா சந்து, 2018-ஆம் ஆண்டு வெளியான 'அக்டோபர்' படத்தின் மூலம் இந்தி சினிமாவிற்கு அறிமுகமானார். இவர், நடிகர் விக்ரமின் மகனான த்ருவ் விக்ரம் நடிப்பில் வெளியான 'ஆதித்ய வர்மா' படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
பனிதா சந்து, 'கவிதா & தெரசா' என்ற படத்தின் படப்பிடிப்பிற்காக கடந்த டிசம்பர் மாதம் 20-ஆம் தேதி, பிரிட்டனில் இருந்து கொல்கத்தா வந்தடைந்தார். அதே விமானத்தில் பயணித்த ஒருவருக்கு 'உருமாறிய கரோனா' தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், நடிகை பனிதா சந்துவிற்கும் நேற்று கரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து, உருமாறிய கரோனா வைரஸ் தாக்கத்திற்கு பனிதா சந்து உள்ளாகியுள்ளாரா என்பதை அறிய கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அந்த மருத்துவமனையில் பிரிட்டனில் இருந்து திரும்பிய பலரும் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர்.
இந்த நிலையில், அம்மருத்துவமனை வளாகத்திற்குள் வந்த பனிதா சந்து, 'மருத்துவமனையில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை' எனக் கூறி ஆம்புலன்சில் இருந்து இறங்க மறுத்துவிட்டார். தொடர்ந்து வலியுறுத்தியும் அவர் ஆம்புலன்சில் இருந்து இறங்க மறுத்ததால், சுகாதாரத்துறை அதிகாரிகள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். மருத்துவமனை வளாகத்திற்கு விரைந்த போலீசார், அவரிடம் நடத்திய பேச்சுவார்த்தைக்கும் பனிதா சந்து உடன்படாததால், அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். பனிதா சந்துவின் இந்தச் செயலால் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.