சுமன்... தற்கால சினிமா ரசிகர்களுக்கு இரும்புத்திரை, வந்தா ராஜாவாதான் வருவேன் போன்ற படங்களில் நடித்த குணச்சித்திர நடிகர், 90ஸ் கிட்சுக்கு 'ஆதிசேஷன்னா பொட்டு வச்சு பொங்கல் சாப்பிடறவன்னு நெனச்சியா?' என்று ரஜினிக்கு நேர் நின்று வில்லத்தனம் செய்த 'சிவாஜி' வில்லன். ஆனால் அதற்கெல்லாம் முன்பு 1980களிலேயே ரஜினி, கமல் என அனைவருடனும் நடித்த ஹேண்ட்ஸம் நடிகர். திரையுலகில் தொடர்ந்து இயங்கி வரும் நடிகர் சுமன் சமீபத்தில் நடித்துள்ள திரைப்படம் 'உணர்வு'. வரும் ஜூலை 19ஆம் தேதி வெளிவரவுள்ள இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. அங்கு பேசிய சுமன், தனது பழைய நினைவுகளையும் பகிர்ந்துகொண்டார். அவரது பேச்சிலிருந்து ஒரு பகுதி...
"இந்தப் படத்தின் இயக்குனர் சுப்பு என்னை அணுகி ஒரு தமிழ்ப் படம் பண்ணனும்னு கேட்ட உடனேயே எனக்கு ஃபுல் எனர்ஜி வந்திருச்சு. ஏன்னா, 1978இல் தமிழில் இருந்துதான் என் கரியர் ஸ்டார்ட் ஆகி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒரியான்னு இன்னைக்கு ஐநூறு படங்கள் நடிச்சுட்டேன். தெலுங்குல ஹீரோவா மட்டும் தொண்ணூறு படங்கள், மற்றதும் சேர்த்து ஒரு நூற்றி ஐம்பது படங்கள் பண்ணிட்டேன். இதுக்கெல்லாம் துவக்கமா இருந்தவர் என்னோட குரு ஒருவர்.
டி-நகர்ல அப்போ 'கிட்டு டிராவல்ஸ்'னு ஒன்னு ரொம்ப ஃபேமஸ். முன்னணியில் இருந்த ரஜினி, கமல் உள்ளிட்ட எல்லா சினிமாக்காரங்களுக்கும் அப்போ அவர்தான் வண்டி அனுப்புவார். சினிமாக்காரர்களின் மைண்ட்செட் எந்த நேரத்தில் எப்படியிருக்கும் என்று புரிந்துகொண்டு நடந்துகொள்ளக்கூடிய டிரைவர்கள், நடிகர்களுக்கேற்ற வண்டிகளை அனுப்பி ஹெல்ப் பண்ணவர். அந்த கிட்டு அண்ணாதான் என்னை டைரக்டர் டி.ஆர்.ராமண்ணாவிடம் கூட்டிச்சென்று அறிமுகம் செய்தார். முதலில் எதுவுமே தெரியாம போனேன். அப்போ கொஞ்சம் பெர்சனாலிட்டி நல்லா இருந்தது, கராத்தேயில் பிளாக் பெல்ட். இதை வச்சு ஒரு நாலஞ்சு படம் சமாளிச்சு பிறகு எல்லா விசயங்களையும் கற்றுக்கொண்டு இப்போது நாற்பது வருடங்களை கடந்து சினிமாவில் இருக்கிறேன்."