பல்வேறு படங்களில் குணச்சித்திர நடிகராக வலம் வரும் சுஜன் அவர்களை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாகச் சந்தித்தோம், பல்வேறு விசயங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.
ஸ்போர்ட்ஸ் மூலமாகத்தான் என்னுடைய வாழ்க்கை தொடங்கியது. இந்தியாவுக்காக மெடல் வாங்க வேண்டும் என்பது என்னுடைய கனவாக இருந்தது. ஈட்டி எறிதல் போட்டியில் என்னுடைய ஆர்வம் இருந்தது. லயோலா கல்லூரியில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் சேர்ந்து, மாடலிங்கில் ஈடுபட்டு அதன் பிறகு சினிமாவுக்கு வந்தேன். இந்தக் காலகட்டத்தில் நிறைய வலிகள், நிறைய கற்றுக்கொள்ளுதல் இருந்தது. ஒரு ரீவைண்ட் பட்டன் இருந்தால் நெகடிவ் விஷயங்கள் அனைத்தையும் போக்கிவிட்டு பாசிட்டிவாக மட்டுமே வாழ்ந்திருப்பேன்.
வல்லினம் படத்தில் முதலில் நடித்தேன். அறிவழகன் மிகவும் நல்ல இயக்குநர். பல்வேறு நல்ல படங்கள் போல் வல்லினம் படமும் காலம் கடந்தே மக்களால் ரசிக்கப்பட்டது. சினிமாவில் உண்மை தான் முக்கியம். இங்கு பொறுமை மிகவும் அவசியம். ஷூட்டிங் சென்று, மேக்கப் எல்லாம் போட்டு, அதன் பிறகு என்னை வேண்டாம் என்று சொன்ன நிகழ்வுகள் எல்லாம் நடந்திருக்கிறது. அன்று அவ்வளவு அழுதேன். ஆனால் இப்போது நான் ஹீரோவாக நடித்திருக்கிறேன். பொறுமையாக இருந்தால் நிச்சயமாக நாம் எதிர்பார்த்ததை விட பெட்டரான விஷயங்கள் நமக்குக் கிடைக்கும்.
சினிமாவில் ஜெயித்தால் நிச்சயம் வாழ்விலும் ஜெயித்து விடலாம். ஒவ்வொரு படம் கிடைப்பதற்கும் ஆண்டுக் கணக்கில் காத்திருக்க வேண்டியிருக்கும். அனைத்து விதமான ரோல்களும் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். சின்னப் படங்களாக இருந்தாலும் நல்ல கன்டென்ட் இருந்தால் இன்று மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். தேவராட்டம் படத்துக்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தன. வாய்ப்புகளைப் பொறுத்தவரை நானும் சில தவறுகள் செய்திருக்கிறேன் என்பது உண்மை.
சினிமாவை நான் எப்போதும் விடமாட்டேன். ரஜினி சார், விஜய் அண்ணா, விஜய் சேதுபதி சார் எல்லாம் எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷன்கள். சினிமா வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களைச் சந்தித்து இந்த நிலைக்கு அவர்கள் வந்துள்ளனர். இவர்களுடைய வாழ்க்கைக் கதைகள் தான் என்னை அடுத்தகட்டத்திற்கு அழைத்துச் செல்கின்றன. தோல்விகள் என்னுடைய எனர்ஜியை அதிகப்படுத்துகின்றன. நடக்கும் அனைத்தும் நன்மைக்கே என்று நினைத்துக்கொள்ள வேண்டும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் நம்முடைய பாதையில் நாம் சரியாகச் செல்ல வேண்டும்.