கரோனா அச்சுறுத்தலால் புலம்பெயர்ந்து தொழில் செய்ய வந்த பணியாளர்கள் பலர் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து மீண்டும் தன்னுடைய சொந்த ஊர்களுக்குச் செல்ல மிகவும் சிரமப்பட்டனர். போக்குவரத்து வசதி இல்லாத நேரத்தில் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களைச் சொந்த ஊருக்கு வழி அனுப்ப சில பிரபலங்கள் மும்முரமாக உதவினார்கள். அதில் முக்கியமானவர் பாலிவுட் நடிகர் சோனு சூட். 20,000க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களை பேருந்து, விமானம் மூலம் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார்.
தற்போது இதுகுறித்துப் பேசியிருக்கும் சோனு, "கடந்த மூன்றரை மாதங்கள் என் வாழ்வை மாற்றும் அனுபவமாக இருந்தன. புலம்பெயர்ந்து வந்தவர்களுடன் தினமும் 16-18 மணி நேரம் செலவிட்டேன். அவர்களின் வலிகளைப் பகிர்ந்து கொண்டேன். அவர்கள் வீடு திரும்ப வழியனுப்பி வைக்கும்போது என் இதயத்தில் மகிழ்ச்சியும், நிம்மதியும் பொங்கும். அவர்கள் முகத்தில் இருக்கும் புன்னகை, ஆனந்தக் கண்ணீரைப் பார்த்தது எனது வாழ்வின் விசேஷமான அனுபவமாக இருந்தது. கடைசி புலம்பெயர் தொழிலாளி வீடு திரும்பும் வரை நான் ஓயமாட்டேன் என்று உறுதி எடுத்தேன்.
இதற்காகத்தான் நான் இந்த நகரத்துக்கு வந்ததாக நம்புகிறேன். இதுதான் என் வாழ்வின் நோக்கம். புலம்பெயர்ந்தவர்களுக்கு உதவ என்னை ஒரு ஊக்கியாகப் பயன்படுத்திய இறைவனுக்கு நன்றி கூற விரும்புகிறேன். மும்பையை நான் மனதார நேசிக்கிறேன்.
இந்தச் சம்பவங்களுக்குப் பிறகு, என்னில் ஒரு பகுதி உபி, பிஹார், ஜார்க்கண்ட், அசாம், உத்தரகாண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் கிராமப்புறங்களில் வாழ்கிறது என்று நினைக்கிறேன். அங்கு எனக்கு புது நண்பர்களும், ஆழமான நட்பும் கிடைத்துள்ளன. இந்த அனுபவங்களை, என் ஆன்மாவில் கரைந்துள்ள கதைகளைப் புத்தக வடிவில் எழுத முடிவு செய்துள்ளேன்" என்று கூறியுள்ளார். பென்குயின் ராண்டம் ஹவுஸ் இந்தியா பதிப்பகம் இந்தப் புத்தகத்தைப் பிரசுரிக்கவுள்ளது.