கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் சிம்பு பெண்கள் குறித்து பாடிய பீப் பாடல் பெரும் சர்ச்சையை கிளப்பியது. அந்த காலகட்டத்தில் பெண்கள் அமைப்புகள் ஒன்று திரண்டு சிம்புவுக்கு எதிராக போர்க்கொடித் தூக்கினர். இதனைத்தொடர்ந்து இப்பாடலை பாடிய சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரின் மீது சென்னை, கோவை உள்ளிட்ட பல பகுதிகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து நடிகர் சிம்பு தனக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தொடுத்திருந்தார்.
இவ்வழக்கு நேற்று(17.2.2022) விசாரணைக்கு வந்தபோது கோவை நீதிமன்ற மாஜிஸ்திரேட்டின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இவ்வழக்கில் சிம்புவிற்கு எதிரான புகாருக்கு ஆதாரம் இல்லை என்று கூறி வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். அத்துடன் நடிகர் சிம்புக்கு மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கு தொடர்பாக காவல்துறை ஒரு வாரத்திற்குள் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.