மராத்தி, தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்த ஷாயாஜி ஷிண்டே தமிழில் 'பாரதி' படத்தில் சுப்ரமணிய பாரதி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார். பின்பு 'பூவெல்லாம் உன் வாசம்', 'பாபா' உள்ளிட்ட படங்களில் முக்கியக் கதாபாத்திரத்திலும், 'தூள்', 'வெடி' உள்ளிட்ட படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்தார்.
இவர் நடிப்பது மட்டுமல்லாமல் இயற்கையின் மீது அக்கறை கொண்டவராகவும் இருந்து வருகிறார். இதற்காக 2015 ஆம் ஆண்டு சஹ்யாத்ரி தேவ்ரையின் என்ற அமைப்பை ஏற்படுத்தி பசுமை ஆர்வலராகவும் செயல்பட்டு வருகிறார். இது அவர் தற்போது வாழ்ந்து வரும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கிறது.
இந்த நிலையில் அங்கு புனே-பெங்களூரு நெடுஞ்சாலையில் சாலை அகலப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் சாலையில் உள்ள மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டு வருவதால் ஷாயாஜி ஷிண்டே அந்த மரங்களை வேறொரு இடங்களில் நட்டு வருகிறார். அப்போது தேனீக்களால் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் சதரா மாவட்டத்தில் உள்ள தஸ்வாடே என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
பின்பு, "கவலைப்பட ஒன்றுமில்லை, தேனீக்களால் தாக்கப்பட்டேன். ஆனால் நான் இப்போது நன்றாக இருக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.