Skip to main content

“தனி மனித ஒழுக்கத்தால் மட்டுமே இதை ஒழிக்க முடியும்”- நடிகர் சதீஷ் கண்டனம்!

Published on 12/10/2020 | Edited on 12/10/2020

simbu

 

 

கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே தெற்கு திட்டை ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் 100 குடும்பங்கள் ஆதிதிராவிடர் சமூகத்தை சார்ந்தவர்கள். 600க்கும் மேற்பட்டோர் மாற்று சமூகத்தினர் உள்ளனர். இந்த நிலையில் தற்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்த ராஜேஸ்வரி சரவணகுமார், ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆறு உறுப்பினர்கள் கொண்ட இந்த ஊராட்சியில் 1 உறுப்பினர் ஆதிதிராவிடர் மீதி 5 பேர் மாற்றுச் சமூகத்தினர்.

 

ஊராட்சித் தலைவர் ஆதிதிராவிடர் சமூகம் என்பதால் அவரை ஊராட்சி கூட்டத்தின்போது துணைத் தலைவர் மோகன்ராஜா தரையில் அமர வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் புகைப்படம் சமூக வலைதளத்தில் பரவியதை அடுத்து, இந்த விவகாரம் காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் அளவிற்கு அறியப்பட்டு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

 

மேலும், கடந்த சுதந்திர தினத்தின்போது ஊராட்சி மன்ற தலைவரை கொடி ஏற்றவிடாமல் ஊராட்சி செயலாளர் சிந்துஜா மற்றும் துணைத் தலைவர் மோகன்ராஜா தடுத்து தாங்களே தேசியக்கொடியை ஏற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவருக்கு ஆதரவு பெருகி வருகிறது. நகைச்சுவை நடிகரான சதீஷ் திட்டை ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரிக்கு நடைபெற்ற அவலத்தை கண்டித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “ஜாதியைக் காட்டி ஒரு ஊராட்சி தலைவரையே நாற்காலி தராமல் தரையில் அமர வைத்த அவலம்... கண்டிக்கத் தக்க கொடூர செயல். என்னால் சமூகத்தை மாற்ற முடியுமோ இல்லையோ... நான் என் வாழ்வில் இத்தவறை செய்ய மாட்டேன். தனி மனித ஒழுக்கத்தால் மட்டுமே இதை ஒழிக்க முடியும். அனைவரும் சமம்” என்று பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்