தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்களில் குணச்சித்திர பாத்திரங்களில் நடித்து பிரபலமான ரவியை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்தோம். அந்த சந்திப்பில் விஜய்யின் வாரிசு படத்தில் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
“விஜய்யின் வாரிசு படத்தில் என்னை நடிக்க அழைத்தார்கள். நான் யாருடைய பரிந்துரையின் பெயரிலும் செல்லவில்லை. அவர்களாகத்தான் அழைத்தார்கள். என்னுடைய புகைப்படத்தை பார்த்து, கூப்டாங்க, அதன் பிறகு என்னை வைத்து புதிய போட்டோ ஷூட் எல்லாம் பண்ணினார்கள். அதன் பிறகு எல்லாம் சரியாக இருக்கும் என்று கூறி, அடுத்த நாள் படப்பிடிப்புக்கு வர சொன்னார்கள். நானும் அடுத்தாள் ஷூட்டிங்கு சென்றேன். மேக்கப், காஸ்டியூம் எல்லாம் மாத்திகிட்டு செட்டுக்கு சென்றேன். ஆனால் திடீர்ன்னு உள்ள வந்த இயக்குநர் வம்சி, ‘இவர் பார்ப்பதற்கு ரொம்ப ரிச்சாக இருக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்கு செட்டாக மாட்டார், வீட்டுக்கு போக சொல்லுங்க’ன்னு சொல்லிட்டாரு. இது ரொம்ப மன வலியை தந்தது.
என்னுடைய சினிமா வாழ்க்கையில் இதுபோன்ற நடந்ததே கிடையாது. சினிமாக்களில் நிறைய முறை நிராகரிக்கப்பட்டு இருக்கிறேன். முதலில் செலக்ட் பண்ணுவார்கள், பிறகு பிடிக்கவில்லை என்று நிராகரிப்பார்கள். அது எனக்கு ஒன்றும் புதிதல்ல. ஆனால் காஸ்டியூம் போட்டுக்கொண்டு படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற பிறகு நிராகரிக்கப்பட்டது இது தான் முதல் முறை. நான் மேக்கப் போட்டு ரிச்சா இருக்கிறேன் என்றால் அது என்னுடைய தவறு இல்லையே, அது மேக்கப் மேனுடைய பிரச்சனை. படத்திற்கு என்னுடைய தோற்றம் எப்படி வேண்டுமே, அப்படித்தானே அவர் வடிவமைக்க வேண்டும். என்னுடைய லுக்கை படத்திற்கு ஏற்றவாறு மாற்றவேண்டியது மேக்கப் மேன் மற்றும் காஸ்டியூமரின் வேலை. எனக்கு நடிக்க தெரியவில்லை, டயலாக் பேச வரவில்லை என்றால் என்னை நிராகரிப்பது என்ன நியாயம்” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
விஜய், பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.