சென்னையில் நடிகர் கார்த்தி நடத்தும் உழவன் பவுண்டேசன் ஒருங்கிணைத்த உழவர் விருது 2023 வழங்கும் விழாவில் பல்வேறு திரைப்பிரபலங்கள், அரசியல் ஆளுமைகள் கலந்து கொண்டார்கள். பல்வேறு நபர்களைப் பாராட்டி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் நடிகர் ராஜ்கிரண் பேசியதாவது..
"திரைத்துறையில் இருக்கும் கலைஞர்களுக்கு சமூகப்பொறுப்பு மிக மிக அவசியம். அதனை நடிகர் சிவகுமார் உணர்ந்ததால்தான் அவர்களின் மூத்த புதல்வன் சூர்யா அகரம் அறக்கட்டளை சார்பாக கல்வி வளர்ச்சி பணியில் ஈடுபட்டுள்ளனர். இளைய மகன் கார்த்தி உழவன் அறக்கட்டளை சார்பாக உழவர்களை கவுரவித்து வருகிறார்கள். இது மிகவும் பாராட்டப்பட வேண்டிய விஷயம். கார்த்தியின் இந்த பணி சாதாரண விஷயமில்லை.
மகாத்மா காந்தியடிகள் நம் இந்தியத் தேசத்தின் ஆன்மா கிராமத்தில் தான் இருக்கிறது என்றார். அவர் இவ்வாறு குறிப்பிட்டது விவசாயத்தைத் தான். ஏனெனில் நம் இந்திய தேசம் விவசாய பொருளாதாரத்தைத் தான் அடிப்படையாகக் கொண்டது. விவசாயிகள் தன்னிறைவு பெற்று பொருளாதார விருத்தி அடையும் போது தான் நாடும் மேம்பட முடியும். அதற்கான சிறு சிறு முயற்சியில் பலரும் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்னும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
நடிகர் கார்த்தி இந்த விழாவிற்கு அழைத்தபோது ஒரு பெண்கள் குழு தங்களின் உழைப்பாலும் மேன்மையாலும் நிறைய சாதித்துக்காட்டி உள்ளார்கள் என்றார். அதனைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தேன். ஆதியில் நம் முன்னோர்கள் காட்டைத் திருத்தி கழனியாக்கினார்கள் காட்டை கழனியாக்கியது ஆண்களாக இருந்தாலும், அந்த கழனியில் உழவூட்டியது பெண்கள் . இது தான் வரலாறு . இது தான் சக்தி. சக்தி இல்லை என்றால் செயல் இல்லை. அப்படி இந்த சக்தியான பெண்கள் நினைத்தால் தான் வீடும் உருப்படும், நாடும் உருப்படும்." என்று பேசினார்.