கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி, ஹைதராபாத் போதைப்பொருள் போலீசார் மாதப்பூரில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் சோதனை நடத்தினர். அங்கு விலையுயர்ந்த போதைப் பொருட்களை போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட திரைப்பட பைனான்சியர் வெங்கடரத்னா ரெட்டி, பாலாஜி மற்றும் முரளி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் நடிகர் நவ்தீப் மற்றும் தயாரிப்பாளர் ரவி ஆகியோர் பெயரைச் சொல்லியுள்ளதாக போலீஸ் தரப்பு தெரிவித்தது. மேலும் ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் சி.வி. ஆனந்த், இந்த வழக்கில் நவ்தீப் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், நடிகர் தலைமறைவாக இருப்பதாகவும் கூறினார். இதற்கு எக்ஸ் தளத்தில் பதிலளித்த நவ்தீப், "அது நான் இல்லை. தயவுசெய்து தெளிவு படுத்துங்கள்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து நவ்தீப், தெலுங்கானா உயர் நீதிமன்றத்தை அணுகி, இந்த வழக்கில் தனக்கு தொடர்பில்லை எனவும் கைது செய்யவுள்ளதை எதிர்த்து நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. பின்பு அவரைக் கைது செய்ய வேண்டாம் என போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நவ்தீப் அறிந்தும் அறியாமலும், ஏகன், இது என்ன மாயம் உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு போதைப்பொருள் சம்பந்தப்பட்ட வழக்கில், 10 திரைப் பிரபலங்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் நவ்தீப்பும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.