மதயானைக் கூட்டம் முதல் பரியேறும் பெருமாள் வரை மாறுபட்ட எதார்த்த நடிப்பில் அந்தக் கதையை நாயகனாக மக்களிடம் கொண்டுச்சேர்ப்பவர் நடிகர் கதிர். நடித்த சிலப் படங்களிலேயே நல்ல நடிகர் என பாராட்டப்படுகிறவர் சமீபத்தில் ஆன்லைனில் வெளியாகியுள்ள சிகை என்னும் படத்தில் மாற்று பாலினத்தவராக நடித்து தன்னைச் சிறந்த நடிகராகவும் நிருபித்துள்ளார். அடுத்து கதிர் நடிப்பில் சத்ரு திரைப்படம் வெளியாகவுள்ளது. தொடர்ந்து தளபதி 63 படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார். சத்ரு படத்தைப் பற்றியும், மேலும் அவரது திரையுலக அனுபவங்களையும் நம்முடன் பகிர்ந்துகொண்டார்.
அடுத்து உங்கள் நடிப்பில் வெளியாகவுள்ள சத்ரு திரைப்படத்தை எந்தமாதிரியானப் படமாக எதிர்ப்பாக்கலாம்?
சத்ரு ஒரு சுவாரசியமான கமெர்ஷியல் படம். ஒரு அதிரடி கமெர்ஷியல் படம் பண்ணுங்கனு நிறையபேர் சொல்லிட்டாங்க. அதோட விளைவுதான் சத்ருப் படத்தை தேர்ந்தெடுத்தது. அந்தக் கமெர்ஷியல் படத்திலும் ஒரு சுவாரசியம் இருக்கணும்னு எதிர்ப்பார்ப்பேன். அதை சத்ரு திரைப்படம் பூர்த்தி செஞ்சுருக்குனே சொல்லலாம்.
இந்தப் படத்தில் போலீஸ் வேஷத்தில் நடிப்பது எவ்வளவு சுவாரசியமாக இருக்கு?
போலீஸ் யூனிஃபார்ம் போட்டாலே ஒரு கெத்து வரும்னு சொல்ருறது உண்மைதான். அதுமட்டுமில்லாமல் போலீஸ் யூனிஃபார்மை ரொம்ப டைட்டா தைப்பாங்க. அதைப் போட்டுகிட்டு நெளியலாம் முடியாது, வெரப்பாவேதான் இருக்கணும். மேலும், சத்ரு வழக்கமான போலீஸ் கதையே இல்லை. இது ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்ட ஆக்ஷன் திர்லர் படம். சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் நாலஞ்சு சின்னப் பசங்க சேர்ந்து ஒரு பேங்கைக் கொள்ளையடிச்சாங்க, அந்தப் பிரச்சனையில் துப்பாக்கிச்சூடெல்லாம் நடந்துச்சு. அதற்குப் பிறகுதான் வெளியூரிலிருந்து சென்னைக்கு வந்திருப்பவர்கள் அவங்களோட விவரங்களை போலீஸ் ஸ்டேஷனில் கொடுக்கவேண்டும் என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அந்தமாதிரி ஒரு குற்றவாளிகளைப் போலீஸ் எப்படித் தேடிப் பிடிக்கிறாங்க, அப்படி பிடிச்சப்புறம் ஒரு வில்லன் செத்துட்டா, அடுத்தச் சண்டைக்குப் போயிடலாம் என்றில்லாமல் வில்லன் சாவுக்கு பழிவாங்கப்படுவது மாதிரியானக் கதையாகவும் சத்ரு இருக்கும். நேர்மையாக, மக்கள் வாழ்க்கையோடு ஒத்துப்போகக் கூடிய, அதிரடியான கமெர்ஷியல் போலீஸ் கதைதான் சத்ரு.
இதுபோன்ற ஒரு கமெர்ஷியல் படத்திற்காக எந்த அளவுக்கு உங்களைத் தயார் செய்யவேண்டியிருந்துச்சு?
குதித்தால் ஆழம் பார்த்துக் குதிக்கணும்னு சொல்லுவாங்க. அப்படித்தான் நான் சத்ரு படத்தில் குதிச்சுருக்கேன். இது கதைக்கருவைச் சார்ந்த கமெர்ஷியல் படம். அதாவது, படம் ஆரம்பிச்ச பத்தாவது நிமிஷத்தில் எல்லோரும் கதைக்குள்ளப் போயிடுவீங்க, முடியுறவரைக்கும் சீட் நுனியில் உட்காரவைக்கிற திர்லர் படமாகத்தான் இது இருக்கும். கமெர்ஷியல் படத்துக்கான அதிகப்படியானத் தன்மைக்குள்ளேயும் போயிடக்கூடாது, மிகவும் இயல்பான உண்மைத்தன்மையிலும் இருக்கக் கூடது. இது இரண்டுக்குமிடையில் இருக்கிறப் படத்தை எடுக்கணும்னு முயற்சிப் பண்ணுனோம். ரொம்ப வலிமையான வசனங்களையும் சாதாரணமாக சொல்றதுக்கானக் காரணம் அதுதான். பொதுவாக என்ன பிரச்சனையாக இருந்தாலும் போலீஸ் என்றால் ஒரு பயம் இருக்கும், அது போலீஸ் பவருக்கானப் பயம். அந்த மூடில்தான் படமும் இருக்கும்.
படத்தின் டிரைலரை ரிலீஸ் பண்ணுனது இயக்குனர் அட்லீ, அவர் டிரைலர் பார்த்துவிட்டு என்னச் சொன்னார்?
மாரி, மாரி 2 போன்றப் படங்களோட எடிட்டர் தான் சத்ரு படத்துக்கும் எடிட்டர். அவர் கமெர்ஷியலாக நல்லா எடிட் பண்ணுவார், எனக்கு அவர் எடிட்டிங் ரொம்பப் பிடிக்கும். முதலில் டிரைலரை அட்லீ அண்ணங்கிட்ட காட்டிணோம். அவர் “சூப்பரா இருக்கு, சுவாரசியமா இருக்கு, டிரைலர் பார்த்ததும் படம் பார்க்கணும்னு ஒரு எண்ணம் உருவாகுது, இதுதான் ஒரு நல்ல டிரைலருக்கு முக்கியம்”னு சொல்லிப் பாராட்டுனார். அதுக்கப்புறம் தான் ரிலீஸ் பண்ணச்சொல்லிக் கேட்டேன். அவரும் ட்விட்டரில் அதை ரிலீஸ் பண்ணினார்.
இப்போது அட்லீயின் இயக்கத்தில் நடிக்கப்போறீங்க, அவருக்கும் உங்களுக்குமான உறவு எத்தகையது?
அட்லீ அண்ணனை இரண்டு வருஷமாகத் தெரியும். சினிமாவையும் தாண்டித் தனிப்பட்ட முறையில் அவருடன் எனக்கு நல்ல பழக்கம் இருக்கு. தளபதி 63 படத்தில் நடிக்கிற வாய்ப்புக்கூட தொழில் ரீதியில் வந்தது இல்லை. எனக்கே அது ஆச்சரியமான விஷயமாகத்தான் இருந்துச்சு. எதார்த்தமாக அட்லீ “இந்தப் படத்தில் ஒரு கேரக்டர் இருக்கு, நீ பண்ணுறீயா”னு கேட்டாரு. என்கிட்டலாம் நீங்க கேட்கலாமா அண்ணா, சொல்லுங்க செய்யுறனுச் சொல்லித்தான் அந்தப் படத்தில் நடிக்க ஆரம்பிச்சேன்.
நீங்க எந்தமாதிரிக் கதைக் கேட்பீங்க? எப்படி அதை தேர்ந்தெடுக்குறீங்க?
நான் ஒரு கதைத் தேர்ந்தெடுக்குறதுக்கு முன்னாடி எனக்கு அது சுவாரசியமா இருக்கா, அதே சுவாரசியம் பார்க்கிறவர்களுக்கும் போய்சேருமா, அப்படிச் சேரும்போது அதோட ப்ளஸ் என்ன, மைனஸ் என்னனு யோசிப்பேன். ஒரு கதைப் எனக்குப் பிடிச்சப்பிறகு அதைப் பற்றி நான் எத்தனைப் பேர்கிட்ட பேசியிருக்கேனுப் பார்ப்பேன். அதுதான் அந்தக் கதையை நான் யோசிச்சுகிட்டே இருக்கங்குறதுக்கான அடையாளம். அப்போ அதில் ஏதோ சுவாரசியமான விஷயம் இருக்கு. அந்த சுவாரசியத்தை மக்களுக்கும் கொடுக்கணும். எனக்கு அது புதுசா இருக்கும்போது பார்வையாளருக்கும் அது புதுசா தெரியுமானு யோசிப்பேன்.
கதிர் கிட்ட ப்ளஸ் எது? மைனஸ் எது?
கண் ஒரு ப்ளஸ், நிறையப்பேர் சொல்லியிருக்காங்க, என்னோட கண்கள் நல்லாயிருக்குனு. இன்னொரு ப்ளஸ், நான் நிறைய தெரிஞ்சுக்கணும், கத்துக்கணும்னு நினைப்பேன். எனக்கு சினிமா பற்றி ஒன்னும் தெரியாது, ஆனால் இப்போது ஒரு படம் எப்படி விற்பனையாகுது என்பதையெல்லாம் தெரிஞ்சுக்குற ஆர்வம் அதிகமாக இருக்கு. என்னோட மைனஸ், வாழ்க்கையை சந்தோஷமாக பிரியாணி சாப்பிட்டுக்கிட்டு அனுபவிக்கணும்னு நினைப்பேன். எனக்கு பிரியாணி என்றாலே ரொம்பப் பிடிக்கும். சாப்பிடுவதற்காகவே வாழ்கிறவுங்க அப்படினு ஒரு லிஸ்ட் எடுத்தால் அதில் இருபதாவது இடத்திலாவது நான் இருப்பேன் நினைக்கிறேன்.
ஆக்ஸிஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் எப்படி இந்தப் படத்தை வெளியிட முன்வந்தாங்க?
டெல்லிபாபுசார் படத்தைப் பார்த்துவிட்டு வெளியிடுறாங்க எனும்போது அதில் சுவாரசியமான விஷயம் இருக்குணு எல்லாருக்கும் புரியும். அவர் இந்தப் படத்தை வெளியிட முன்வந்ததுமே ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. ஏனென்றால், அவரால் மிக சரியாக இந்தப் படத்தை மக்கள்கிட்ட கொண்டுபோய் சேர்க்கமுடியும்.
விஜய் சேதுபதிக்கும், யுவன் சங்கர் ராஜவிற்கும் கலைமாமணி விருது கொடுத்திருக்காங்க. அதை எப்படி பார்க்குறீங்க?
விஜய் சேதுபதிக்கு எந்த விருது வேணும்னாலும்கொடுக்கலாம். ஒருத்தர் தொழிலைத் தாண்டி தனிப்பட்டமுறையில் அதிகமான அன்பை சம்பாதிக்குறதாக இருக்கட்டும், அன்பைக் காட்டுறதாக இருக்கட்டும், அதற்காகவே அவருக்கு எத்தனை விருது வேண்டுமானாலும் கொடுத்துக்கொண்டேயிருக்கலாம். விஜய் சேதுபதி, அட்லீ, புஷ்கர் காயத்திரி மாதிரி நல்லவங்களுக்கு நடுவில் இருக்கிறதே பெரிய ஆசிர்வாதமாக நினைக்கிறேன். அதுபோல, யுவன் இசை இளைஞர்களோட புத்துணர்வு இசையினு சொல்லலாம்.
ரௌடி பேபி 250 மில்லியன் பேர் பார்த்திருக்காங்க. அதெல்லாம் நான் நினைச்சே பார்த்தது இல்ல. அவர் ரொம்ப அமைதியாய் இருப்பார். அமைதியாய் இருக்கிற ஒருத்தருக்குள்ளிருந்து இப்படியொரு விஷயமானு ஆச்சரியமா இருக்கும். அவர்கிட்ட என்ன கேட்டாலும் எதாவது வித்தியாசமா வாசிச்சுக்காட்டுவாரு.
தளபதி 63 படத்தில் நடிக்கும்போது தளபதியை முதல் முறைப் பார்த்து என்ன சொன்னீங்க.
நன்றிச் சொன்னேன், இதையெல்லாம் நான் எதிர்பார்க்கவே இல்ல. இந்த மாதிரி ஒரு வாய்ப்புக் கொடுத்ததுக்காக அவருக்கு நன்றி சொன்னேன், தளபதி ரசிகர்களும் இப்போ என்னை வேற ஒரு இடத்தில் தூக்கி உட்கார வச்சுருக்காங்க. அவங்களுக்கும் நன்றி சொல்லனும்.