சமீப கால தமிழ் சினிமாக்களின் ஃபேவரிட் போலீஸ் நடிகர் இ.ராமதாஸ். யுத்தம் செய், காக்கிச்சட்டை, விக்ரம் வேதா உள்பட பல படங்களில் சின்சியர் போலீசாக நடித்திருப்பவர். பிற வேடங்களிலும் இயல்பான நடிப்பின் மூலம் கவனமீர்த்தவர். இவர் ஒரு இயக்குனர் என்பது பலருக்கு புதிய செய்தியாகத்தான் இருக்கும். மோகன் - சீதா நடித்த ஆயிரம் பூக்கள் மலரட்டும், மன்சூர் அலிகான் நடித்த ராவணன் உள்ளிட்ட சில படங்களை இயக்கிய இவர், பல இயக்குனர்களின் கதை, திரைக்கதைகளில் முக்கிய பங்காற்றியுள்ளார். இயக்குனர் சேரனுக்கு நெருக்கமான ராமதாஸ், பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேரன் கலந்துகொண்டது குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார். அவரது பேச்சின் ஒரு பகுதி...
"தனிப்பட்ட முறையில் ராமதாஸ் - சேரன் என்ற அண்ணன் தம்பியா, சேரன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது எனக்குப் பிடிக்கல. ஆனால், இப்படி ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வது அவரது உரிமை, முடிவு. கமல்ஹாசன் என்ற பெரிய லெஜெண்டே சொல்றார், 'பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக மக்களை சென்றடைவேன் என்கிறார். அப்படி இருக்கும்போது சேரன் சென்றதிலும் நியாயம் இருக்கிறது. சில வருடங்களாகப் படம் எடுக்கவில்லை, சமீபத்தில் எடுத்த 'திருமணம்' படமும் சரியாகப் போகல. அவருக்கு தேவைகள் இருக்கும், பசி இருக்கும். அதற்கு நாம எதுவும் உதவ முடியாது. அப்படி இருக்கையில் அவர் சென்றது சரிதான்.
பாரதி கண்ணம்மா, பொற்காலம் போன்ற நல்ல படங்கள் எடுத்த ஒரு இயக்குனரா, என் தம்பியா, என் அப்பாவோட பேரை பொற்காலம் படத்துல ஒரு பாத்திரத்துக்கு வச்சவரா... இப்படிப்பட்ட சேரன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போனது பிடிக்கல. ஆனால், தேவை இருந்தால் போய்தானே ஆகணும். கவின் சொன்னார் 'ஆறு வாரம் இங்க இருந்தாதான் கடன் அடைக்கமுடியும்'னு கவின் சொல்றார். அது மாதிரி சேரனுக்கு பத்து வாரம் இருக்கவேண்டிய தேவை இருக்கலாம்.
சில இடங்களில் சேரன் அதீதமாக ரியாக்ட் செய்வது போல இருக்கலாம். நாங்க எல்லாம் சிவாஜியின் வெறியர்கள். அந்த எச்சம் அவருக்குள்ள இருக்கலாம். எனக்குத் தெரிஞ்ச சேரன், அவ்வளவு சீக்கிரம் உடையும் ஆள் இல்லை. மீரா சொன்ன குற்றச்சாட்டு மிகப்பெரியது. தனது கேரக்டர் பற்றி இப்படி தவறாகப் பேசும்போது சேரனின் ரியாக்ஷன் சரிதான். சேரன் வெளியே வந்தால் நான் "ஏன்டா தம்பி?"னுதான் கேப்பேன். வேற ஒன்னும் கேட்க மாட்டேன். எனக்கு அவனை அவ்வளவு பிடிக்கும்."