‘தட் 70ஸ் ஷோ’, இது அமெரிக்காவின் புகழ்பெற்ற டிவி தொடர்களுள் ஒன்று. 1998ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான இதில் ஸ்டீவன் ஹைட் என்ற கதாபாத்திரத்தில் தோன்றி புகழ்பெற்றவர் டேனி மாஸ்டர்சன்.
இவர் மீது பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. டேனி மாஸ்டர்சன் தங்களை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக மூன்று பெண்கள் கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் குற்றம் சாட்டினர். அந்த குற்றச்சாட்டில், டேனி 2001, 2003ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில், குற்றம்சாட்டிய பெண்களை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார் என கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து உடனடியாக டேனி, நெட்பிளிக்ஸ் தொடரான ‘தி ரேன்ச்’ இல் இருந்து நீக்கப்பட்டார். ஆனால், இந்த குற்றச்சாட்டிற்கு டேனி தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தார்.
இதனிடையே 3 ஆண்டுகளாக நடந்த இந்த விசாரணையில், தற்போது டேனி மாஸ்டர்சன் மீது 3 பாலியல் வன்கொடுமை வழக்குகளுக்காக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்காக அவருக்கு 45 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.