பல்வேறு படங்களில் குணச்சித்திர வேடத்திலும் பல சின்னதிரை சீரியல்களில் படுபிசியாக நடித்து வரும் நடிகர் பிர்லா போஸ் அவர்களை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்தோம். அவரது பல்வேறு அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.
தர்மபுரி மாவட்டத்தில் பிறந்தவன் நான். அம்மாவும் அப்பாவும் படிக்கவில்லை. அதனால் என்னைப் படிக்க வைத்தனர். டிகிரி முடித்தேன். நான் போலீசாக வேண்டும் என்பது அம்மாவுடைய ஆசை. அதற்காகத்தான் நான் சென்னைக்கு வந்தேன். அந்த வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. பிர்லா டிரான்ஸ்போர்ட்டில் சிறிது காலம் வேலை செய்தேன். அதன் மூலம் வந்தது தான் பிர்லா என்கிற பெயர். அதன் பிறகு சினிமாவுக்கு வந்தேன். பிர்லா போஸ் என்கிற பெயரை வைத்தது பாலச்சந்தர் சார் தான்.
சுக்ரன் படத்தில் நடித்தபோது விஜய் சாருக்கும் எனக்கும் நல்ல நட்பு இருந்தது. அவருக்கும் எனக்கும் ஒரு சிறிய மனஸ்தாபம் வந்தது. அதற்கு நான் காரணம் இல்லை. அவருடைய அசிஸ்டன்ட் ஒருவர் என்னை அவமானப்படுத்தியதால் விஜய் சார் என்னை அழைத்தும் அவரை நான் தவிர்த்தேன். இப்போது யோசிக்கும்போது அது குழந்தைத்தனமாக இருக்கிறது. அந்த அசிஸ்டன்ட் செய்த விஷயம் விஜய் சாருக்குத் தெரியாது. அதன் பிறகு விஜய் சாரை சந்திக்க முடியவில்லை. சூர்யா சாரும் என்னுடன் நட்பாகப் பழகுவார்.
சதுரங்க வேட்டை படம் எனக்கு மிகவும் பிடிக்கும். வினோத் சாருடன் பணியாற்ற வேண்டும் என்று விரும்பினேன். துணிவு படத்தில் அந்த வாய்ப்பு கிடைத்தது. அதில் கிடைத்த ரீச் மிகப்பெரியது. அஜித் சார் கெத்தான ஒரு நடிகர். பொதுவாக நான் உயரமாக இருப்பதால் பல வாய்ப்புகளை இழந்திருக்கிறேன். போட்டோ எடுக்கக் கூட பலர் அதனால் அனுமதித்ததில்லை. ஆனால், அந்த வித்தியாசம் பார்க்காதவர்கள் கமல் சாரும் அஜித் சாரும் தான். அஜித் சாருடன் போட்டோ எடுத்தபோது அவர் எனக்கு கோட் மாட்டிவிட்டார்.
பல படங்களில் நான் நடித்த காட்சிகள் எடிட்டிங்கில் போயிருக்கின்றன. ஷூட்டிங்கின்போது ஏற்படும் பிரச்சனைகள் அந்தந்த சூழ்நிலைகளால் ஏற்படுபவை. கிடுகு படத்தில் நடித்தபோது அந்த டீமிடம் சரியான ஒருங்கிணைப்பு இல்லை. எனக்கு சம்பளமும் சரியாக வரவில்லை. அனைவருக்கும் பொதுவான நான் அந்தப் படத்தில் ஏன் நடித்தேன் என்று நண்பர்கள் பலர் கேட்டனர். ரஜினி சாரின் ஜெயிலர் படத்திலும் நடித்திருக்கிறேன். என்னுடைய காட்சிகள் படத்தில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.