
திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் மூலமாகப் பிரபலமடைந்த நடிகர் பிபின் அவர்களை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்தோம். திரை அனுபவம் குறித்து நம்மோடு தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
என்னுடைய சினிமா கேரக்டர்கள் மூலம் எனக்கு பல்வேறு பெயர்கள் மக்களிடம் கிடைத்துள்ளன. இப்போது டிடி ரிட்டன்ஸ் படத்துக்குப் பிறகு என்னை குழந்தை என்று அழைக்கிறார்கள். சினிமாவில் எனக்கு சரியான ஸ்பேஸ் கிடைத்தது. ஒரு மைல்கல்லாக டிடி ரிட்டன்ஸ் படம் அமைந்துள்ளது. இந்தப் படத்தின் டீமோடு பணியாற்றியது என்னுடைய குடும்பத்தினருடன் இருந்தது போன்ற உணர்வைத் தான் எனக்கு வழங்கியது. தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த டீமுடன் பணியாற்றுகிறேன். அவர்களோடு எப்போதும் நான் தொடர்பிலேயே இருந்தேன்.
சந்தானம் தன்னுடைய அனைத்து படங்களிலும் அவரோடு நடிக்கும் சக நடிகர்களுக்கு நல்ல ஸ்பேஸ் கொடுப்பார். நடிக்கும்போது அவர்களை உற்சாகப்படுத்துவார். அவர் நல்ல மனிதர். என்னுடைய நடிப்பை சந்தானம் மிகவும் ரசிப்பார். சினிமாவுக்கு வருவதற்கு முன்பே இயக்குநர் தரணி எனக்கு நல்ல நண்பர். சுதா கொங்கரா தன்னுடைய ஸ்கிரிப்டில் எப்போதும் சரியாக இருப்பார். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு முதலில் அவர் தான் வருவார். அதனால் அவர் வெற்றி பெற்றதில் ஆச்சரியம் இல்லை.
டிடி ரிட்டன்ஸ் படத்தில் முழுக்கதை கூட கேட்காமல் தான் நடித்தேன். அந்த டீமின் மீது எனக்கு முழு நம்பிக்கை இருந்தது. படத்தின் கேரக்டருக்காக 13 நாட்கள் முழுமையாக டவுசரில் தான் இருந்தேன். கேரக்டருக்காக நம்மை மாற்றிக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் மிகவும் திறமையானவர்கள் என்பதால் இரண்டாவது டேக் செல்லும் நிகழ்வே குறைவாகத்தான் இருந்தது. ஒரு படத்தில் ஹரஹர மகாதேவகி குரலில் நான் பேசுவது போல் வரும். ஆனால் அதில் என் கேரக்டருக்கு டப்பிங் செய்தது நான் அல்ல.
டிடி ரிட்டன்ஸ் படத்துக்கு நிறைய பாராட்டுகள் வருகின்றன. நல்ல நடிகனாக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். காமெடி மட்டுமல்லாமல் சீரியஸ் கேரக்டர்களிலும் நான் நடிக்கிறேன். மொட்டை ராஜேந்திரன் சார் சிறந்த ஒரு நடிகர். கடுமையான உழைப்பாளி. அவ்வளவு ஃபிட்டாக இருப்பார். அவர் ஒரு சிறந்த மனிதரும் கூட. இவர்கள் போன்று சிறப்பாக நடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. டிடி ரிட்டன்ஸ் படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மக்கள் இன்னும் அதிக ஆதரவை அளிக்க வேண்டும்.