பொங்கல் தினத்தையொட்டி தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகம் முழுவதும் பல இடங்களில் நடைபெறுவது வழக்கம். அதில், அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு பகுதியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப் பிரசித்தி பெற்றவை. வீரர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு நடவடிக்கைகளை விழா கமிட்டியினர் மேற்கொண்டாலும் போட்டிகளின் போது ஏற்படுகின்ற உயிரிழப்புகள் தடுக்க முடியாதவையாகின்றன. அந்த வகையில், இந்தாண்டும் சில உயிரிழப்புகள் ஏற்பட்டன.
இந்த நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது ஏற்படுகிற மரணத்தைத் தடுப்பதற்கான ஒரு யோசனையை நடிகர் அரவிந்த் சாமி முன்வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "பாதுகாப்பு அம்சங்களை விளையாட்டில் அறிமுகப்படுத்துவது போட்டியின் சுவாரசியத்தை குறைக்காது. கிரிக்கெட், பாக்சிங், ஹாக்கி, ஆட்டோ ரேஸ், தற்காப்புக் கலைகள், சைக்கிளிங் ஆகிய போட்டிகளில் இதன்மூலம் பல்வேறு உயிரிழப்புகள் தடுக்கப்பட்டும் காயங்கள் குறைந்தும் உள்ளன. இது வீரர்களுக்கு மரியாதை அளிக்கவும் விளையாட்டை பிரபலப்படுத்துவதற்கும் வழிவகை செய்யும். ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் பரிசீலனை செய்யமுடியுமா?" எனக் குறிப்பிட்டுள்ளார்.