"சினிமாவில் ஒண்ணுமில்லாதவன்னுதானடா இப்டி பேசுற நீ! நானும் ஒரு நாள் வந்து காட்டுறேன், எல்லாம் ஒரு நைட்ல மாறிவிடும்.." - ஒரு விளையாட்டு மைதானத்தில் தன் சக சினிமா நண்பரால் எள்ளி நகையாடி ஏளனம் செய்யப்பட்ட போது அவமான வலியில் துடித்துப் போன அருண்விஜய் பேசிய வைராக்கிய வரிகள் இவை. வாரிசு நடிகர், ராசியில்லாத நடிகர் என்பன போன்ற பல தடைகளை உடைத்து, தன்னம்பிக்கை நாயகனாக, இந்த இடத்துக்கு வந்துசேர கிட்டத்தட்ட இருபத்தி ஐந்து ஆண்டுகள் ஆகியிருக்கின்றன.
சுந்தர்.சி இயக்கத்தில் 'முறை மாப்பிள்ளை' படத்தில் 1995-இல் அறிமுகமானவர் அருண்குமார். பின்னாளில் அருண்விஜய்யாக மாறிய அருண்குமாருக்கு சினிமாவில் அறிமுகம் எளிதாகவே நடந்தது. கல்லூரிக்கு செல்வதற்கு முன்பே படப்பிடிப்புக்கு வந்துவிட்டார் அருண். தந்தை விஜயகுமார் பிரபல நடிகரென்பதால் அறிமுகம் எளிதாக இருந்தாலும் வெற்றி அவ்வளவு எளிதாக இல்லை. 'முறைமாப்பிள்ளை', 'ப்ரியம்' 'காத்திருந்த காதல்' என தொடர்ந்து படங்கள் வந்தன. ஆனாலும் இவர் வெற்றி நாயகனாகவில்லை. 'லக் இல்லப்பா' என்றே சினிமா உலகம் இவரை பற்றி பேசியது. 'லவ் டுடே' என்ற பெரிய வெற்றிக்குப் பிறகு இயக்குனர் பலசேகரன் பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனத்துக்காக இயக்கிய 'துள்ளித் திரிந்த காலம்' படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது அருண்விஜய்க்கு. இந்தப் படம் இவருக்கு திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதுவும் நிகழவில்லை. அவர் மீது குத்தப்பட்டிருந்த தோல்வி முத்திரை இன்னும் அழுத்தமானது.
எந்த ஒரு வெற்றியும் எளிதில் கிடைத்துவிடாது. ஆனால் அருண் விஜய்க்கோ வெற்றியின் வாசத்தையே காலதாமதமாகத்தான் உணர முடிந்தது. அவர் வாரிசு நடிகர் எனவும் விமர்சிக்கப்பட்டார். 'அப்பா இருக்குறதால ஈசியா சினிமாக்குள்ள நுழஞ்சிட்டாரு. ஆனா ஜெயிக்கமுடியாது. இவரெல்லாம் இனி எங்க வரமுடியும், நேத்தி வந்த சின்ன பசங்க எல்லாம் சினிமாவுல கொடிகட்டிப் பறக்கறானுங்க, அதுக்கெல்லம் ஒரு லக் வேணும்ப்பா' என பேசியர்வர்கள் ஏராளம். 'அருண் நீங்க நல்லாதா நடிக்கிறீங்க, என்னமோ உங்க நேரம் அப்டியிருக்கு' என அவரிடமே ஆறுதல் சொல்வது போல் அகமகிழ்ந்து சொன்னவர்களிடம் சிரித்துக்கொண்டே "ஆமாங்க" என்று வலியுடன் கடந்து சென்றதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அவ்வப்போது 'இந்தப் படம் திருப்புமுனையாகும்' என்ற எதிர்பார்ப்போடு படங்கள் வந்தன. 'உளவுத்துறை' இயக்குனர் ரமேஷ் செல்வன் இயக்கிய 'ஜனனம்' எதிர்பார்க்கப்பட்டது. சேரன் இயக்கிய 'பாண்டவர் பூமி' எதிர்பார்க்கப்பட்டது. 'பாண்டவர் பூமி' வெற்றி பெற்ற படம்தான். அருண்விஜய்க்கும் நல்ல பெயர்தான். ஆனாலும் அந்தத் திருப்பத்தை எந்தப் படமும் தரவேயில்லை.
நமக்கான பாதையை நாம்தான் உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்த அருண்விஜய், அப்போதைய ட்ரெண்டான கமர்சியல் பாதைக்கு மாறினார். 'மலை மலை', 'மாஞ்சா வேலு' என உறவினர்கள் பங்களிப்போடு படங்கள் தயாரித்து நடித்து, சினிமா உலகில் தன் இருப்பை உணர்த்திக்கொண்டேயிருந்தார். ஆனாலும் அந்த ஒரு ரகசியம் அவருக்குப் பிடிபடவேயில்லை. அது தன் வெற்றி ரகசியம், தன் பாதை எது என்ற ரகசியம். அந்த ரகசியத்துக்கான விடையோடு அவரை தேடி வந்தவர் இயக்குனர் மகிழ் திருமேனி. அவரும் முதல் படம் இயக்கி தோல்வியை சந்தித்தவர்தான். இருவரும் இணைந்தனர். 'தடையற தாக்க' அருண்விஜய்யை முதல் முறையாக ஒரு நல்ல, தரமான, பொழுதுபோக்குப் படத்தில் நாயகனாக 'நல்லாத்தான்யா இருக்காரு' என்று ரசிக்கப்பட வைத்தது.
அத்தனை வருட பொறுமைக்கும் மன உறுதிக்கும் பரிசாகக் கிடைத்தது அடுத்த வாய்ப்பு. உடலை உருக்கி நடிப்பை மெருகேற்றி 'அதாரு அதாரு காட்டாதே உதாறு' என அஜித்துக்கு முன்னால் அசால்ட்டாக நடித்து அசத்திய 'என்னை அறிந்தால்' அவருக்கான மிகப் பெரிய பிரேக். 'என்னை அறிந்தால்' படத்தின் முதல் நாள் முதல் காட்சியை காசி தியேட்டரில் ரசிகர்களோடு பார்த்துவிட்டு வெளியே வந்த அருண் விஜய்க்கு அது பொக்கிஷ நாள். ஒரு மாஸ் ஹீரோவின் முதல் நாள் காட்சி... அவரது ரசிகர்கள் குவிந்திருப்பார்கள்... அவரை எதிர்த்து வசனம் பேசி நடித்திருக்கிறார் அருண்.
இதனால் தியேட்டருக்கு வரவேண்டாம், ஏதேனும் அவமதிப்பு, அசம்பாவிதம் ஏற்படக்கூடும் என்று தயாரிப்பு தரப்பு சொல்ல, தன் நடிப்பை எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்று பார்க்கவேண்டுமென்ற தவிப்பில், ஏதோ ஒரு தைரியத்தில் தியேட்டருக்கு சென்றார் அருண். அவருக்கு அஜித் ரசிகர்கள் கொடுத்தது ஸ்வீட் சர்ப்ரைஸ். 'விக்டர், விக்டர்' என்று அவரைச் சூழ்ந்து ரசிகர்கள் புதிதாக ஆர்ப்பரித்துக் கையசைக்க... காலமெல்லாம் இந்த ஒரு தருணத்திற்காக தவமிருந்த அந்த கலைஞனின் ஆன்மா, அந்த இனிப்பு நிமிடம் வசப்பட்ட போது கட்டுப்படுத்த முடியாத கண்ணீரால் நன்றி சொல்லியது.
'இவருக்கு பேக் - அப் (backup) இருக்கு. அதனால இவ்வளவு நாள் ட்ரை பண்ணார்' என்றால், அது உண்மைதான். ஆனால், பேக் - அப் (backup) என்பது புறத்துக்குதான். மனது அடையும் அவமானம், வலி, விரக்திக்கு எது பேக் - அப்? இவர் காலகட்டத்தில் அறிமுகமான சிலர் இவரை முந்தி வென்று எங்கேயோ சென்றுவிட்டனர். இன்னும் பலர் தோல்வியால் துவண்டு ஒதுங்கிவிட்டனர். நின்று போராடி வென்றிருக்கிறார் அருண். "இவ்வளவு நாள் சினிமாவை விட்டு வெளிய போகாம இருக்கேன்னா அதுக்கு ஏதோ ஒரு காரணம் இருக்குன்னு மட்டும் தெரியும். அதனாலதான் தொடர்ந்து ட்ரை பண்ணேன்" என்று சொல்லும் அருண் "அடிக்கடி விருது நிகழ்ச்சிகளுக்கு அழைக்கப்படுவேன், 'கண்டிப்பா வந்துருங்க சார், வந்துருங்க சார்னு பயங்கரமா ஃபாலோ பண்ணி கூப்பிடுவாங்க. அங்க போனா நான்காவது அல்லது ஐந்தாவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருக்கும், சரி ஸ்டேஜுக்காவது கூப்பிடுவாங்கன்னு பார்த்தா அதுவும் இருக்காது, மத்தவங்களுக்கு கொடுக்கப்படும் விருதுகளை பார்த்து கைதட்டிவிட்டு வந்துவிடுவேன்" என்று அவமானங்களை அசால்ட்டாக சொல்கிறார். அஜித், கெளதம் மேனன் குறித்து எப்போதும் நன்றி உணர்வுடனே பேசுகிறார்.
தொடர்ந்து கதை தேர்வில் மிகுந்த கவனத்தோடு செயல்படும் அருணை ஒரு சிறந்த ஆக்சன் ஹீரோவாக அறிமுகப்படுத்தியது 'குற்றம் 23'. மணிரத்னம் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் செம்ம ஸ்டைலாக 'செக்கச் சிவந்த வானம்' ஒரு ஹீரோவாகவும் வில்லனாகவும் மாறுபட்ட திரைக்களத்தில் அடித்து ஆடி பெரிய வெற்றியை பெற்று சினிமா துறையில் ஆழமாக 'தடம்' பதித்தார். 'தடம்' வெற்றி அருண்விஜய் - மகிழ்திருமேனி இருவரும் ஒருவர் மேல் ஒருவர் வைத்த நட்புக்கும் நம்பிக்கைமுமான அடையாளம். இப்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிற 'மாஃபியா' கலவையான விமர்சனங்களைப் பெற்று வந்தாலும் நல்ல ஓப்பனிங் இருக்கிறது. 'பாக்ஸர்', 'அக்னிச் சிறகுகள்' என பல படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. சிவகார்த்திகேயனை விமர்சித்து என்று சொல்லப்பட்ட ட்வீட் போல சிறுசிறு சர்ச்சைகளையும் தாண்டி பெரும்பாலான சினிமா ரசிகர்களால் அன்போடு ரசிக்கப்படுகிறார்.
அன்று அவர் சொன்னது போலவே அந்த ஒருநாள் இரவு எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. ஆனால் அந்த இரவு ஒரு பகலுக்குப் பிறகு வந்தது அல்ல பல வலிகளுக்குப் பிறகு வந்தது. அந்த இரவுக்குப் பின்னால் அப்பியிருந்த கனத்த வெறுமையை இப்போது தனது புதுப்புது வெற்றிகளின் மூலம் வண்ணம் பூசிக்கொண்டிருக்கிறார். 'வெற்றி எல்லோருக்கும் ஒரே மாதிரி அல்ல, ஒவ்வொருவருக்கும் ஒரு டைம் எடுக்கும், அது வர்ற வரைக்கும் நாம நிக்குறதுதான் முக்கியம்' என்று நம் கண் முன் நிற்கும் ஒரு 'மோட்டிவேஷன்' அருண்விஜய்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அருண்...!