அனுபவ் சின்ஹாவின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் 'ஆர்டிக்கள் 15'. இந்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இந்தியில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தமிழில் 'நெஞ்சுக்கு நீதி' என்ற பெயரில் அருண்ராஜா காமராஜ் இயக்க உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்திருந்தார். நேற்று (20.5.2022) வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவதோடு, சினிமா விமர்சகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இப்படம் குறித்து நடிகர் ஆரி கூறுகையில், "நெஞ்சுக்கு நீதி படத்தை பார்த்த பலரும் பாராட்டுகிறார்கள். சமூக நீதியை சரிசமமாக சொல்லும் படம் இது. ஒன்றை உயர்த்தி மற்றொன்றை தாழ்த்தி எடுக்கப்பட்ட படம் அல்ல. முக்கியமாக சாதி அரசியல் படம் அல்ல. நிறைய பேர் இந்த படத்தின் கதையை கேட்டு வேறு யாரையாவது நடிக்க வையுங்கள் என்று மறுத்திருக்கிறார்கள். குறிப்பாக அதர்வா, அருள்நிதி உள்ளிட்ட நடிகர்களுக்கு நன்றி. ஒரு வேலை அவர்கள் நடித்திருந்தால் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்காது.
மற்ற மாநிலங்களில் பெயருக்கு பின்னாடி சாதி இருக்கு. ஆனா இங்க பெயருக்கு பின்னாடி சாதி இல்லை. அப்படி இருக்கையில் நீங்க ஏன் இப்படி சாதியை தூண்டுகிற வகையில் படம் எடுக்கிறீர்கள் என்று பலர் கேட்கிறார்கள். நாம் பெயரில் மட்டுமே சாதியை ஒழித்து விட்டோம் , ஆனால் நம் மனதில் சாதி அப்படியே தான் இருக்கிறது. சாதியை வெளியில் சொல்வது அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால் சமூக நீதி பற்றிய புரிதலோடு இருப்பது ரொம்ப முக்கியம். நாம எந்த சாதியில் பிறந்தோம் என்பது பிரச்சனை இல்லை. ஆனால் அந்த சாதி பெருமையோடு மற்றவர்களை இழிவாக பாக்கிறதுதான் இங்க பிரச்சனை. அதை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். அதற்கான முயற்சிதான் இந்த படம்" எனத் தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினின் தம்பி அருள் நீதி தவறவிட்ட இந்த படத்தை அவரின் அண்ணன் நடித்து 'நெஞ்சுக்கு நீதி'யில் இருக்கும் சமூக நிதியை மக்களிடம் வெளிப்படுத்தியுள்ளார் என்று சினிமா விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.