ப்ரமோத் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் 25வது திரைப்படமாக அதர்வா முரளி, இயக்குநர் சாம் ஆண்டன் இணையும் படத்தில் இந்தியாவில் முதல்முறையாக புதிய முயற்சியாக சிங்கிள் ஷாட் ஆக்சன் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. ரசிகர்களை வாய் பிளக்க வைக்கும் ஆக்சன் காட்சியாக உருவாகியுள்ள இக்காட்சி குறித்து இயக்குநர் சாம் ஆண்டன் கூறும்போது...
"இது எனது நீண்ட நாள் கனவு. நானும் திலீப் சுப்பராயன் மாஸ்டர் அவர்களும் பல காலம் முன்பாகவே இப்படி ஒரு ஆக்சன் காட்சியை எடுக்க திட்டமிட்டோம். இப்படத்தில் அந்தக் கனவு நிறைவேறியுள்ளது. அதுவும் சுறுசுறுப்பும், உத்வேகமும் நிறைந்த நடிகர் அதர்வா முரளி போன்ற நாயகன் அமைந்ததால்தான் இது சாத்தியமானது. சிங்கிள் ஷாட்டில் ஒரு ஆக்சன் காட்சியைத் திட்டமிட்டு எடுப்பது மிக சவாலானதாக இருந்தது. திட்டமிட்ட பிறகு ஒருநாள் மட்டுமே நாங்கள் ரிகர்சல் செய்தோம். படக்குழுவினரின் அர்ப்பணிப்புடன் கூடிய அயராத உழைப்பால் இக்காட்சி அற்புதமாக வந்துள்ளது. இப்படத்திற்கு பிறகு அதர்வா இந்திய அளவில் புகழ்மிக்க நடிகராக மாறிவிடுவார்" என்றார்.
மேலும் ப்ரமோத் ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் ஷ்ருதி நல்லப்பா இதுகுறித்து பேசும்போது... "இந்த ஆக்சன் காட்சி, சினிமாவில் ஆக்சன் படங்களுக்கே ஒரு பெரும் மைல்கல்லாக இருக்கும். நடிகர் அதர்வா அவர்கள் காட்டிய அர்ப்பணிப்பு, அவரது உழைப்பு போற்றப்பட வேண்டியது. இந்த அற்புதமான காட்சியை வடிவமைத்ததற்கு திலீப் சுப்பராயன் மாஸ்டர் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தக் காட்சியை மிக அழகாக படம்பிடித்ததில் ஒளிப்பதிவு குழுவினரின் பங்கு மிகப்பெரியது. இவையனைத்திற்கும் தலைமை வகித்த, மிகப்பெரும் கற்பனை திறன்மிக்க இயக்குநர் சாம் ஆண்டன் அவர்களுக்குப் பெரும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். எங்களின் ப்ரமோத் ஃபிலிம்ஸ் சார்பில் இந்த ஆக்சன் காட்சி உலக சினிமா வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்பதில் பெருமை கொள்கிறோம்" என்றார்.