தேசிய நாடகப் பள்ளியில் பட்டம் பெற்றவரும் சித்தா, கருடன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் காதாபாத்திரத்திற்கேற்ப நடிக்க பயிற்சியளித்தவருமான ராஜேஷ் பாலச்சந்திரனை நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாகச் சந்தித்தோம். அப்போது அவர் சினிமாவில் பணியாற்றிய அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துகொண்டார்.
ராஜேஷ் பாலச்சந்திரன் பேசுகையில், “நடிப்பு என்பது பிறவி மற்றும் இரத்தத்தில் இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். இரத்தத்தில் இருக்க அது என்ன புற்றுநோயா? எந்த வயதில் இருந்தாலும் நடிப்பை வெளிக்கொண்டு வர முடியும். நடிக்க வருபவர்கள் சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும். ஒரு எமோஷன் என்பது நிஜ வாழ்க்கையில் எல்லோருக்கும் இருக்கும். ஆனால் அதை கேமரா முன்பு வெளிப்படுத்துவதில்தான் சிக்கல் ஏற்படுகிறது. நடிப்பதற்கான வழிமுறைகளைப் புரிந்துகொண்டு ஒருமுறை கஷ்டப்பட்டாலே போதும். அந்த கஷ்டம் வாழ்க்கை முழுக்க நடிப்பதற்கான புரிதலை கொடுத்துவிடும்.
சித்தா படத்தில் நடித்த குழந்தைக்கு படத்தின் கான்செப்ட் தெரியாமலேயே நடிக்க வைத்திருப்போம். அதே போல் சித்தார்த் அந்த படத்தில் நடிக்க படத்தின் கதைக்கேற்ப மூன்று வகையாக அவரின் கேரக்டரை பிரித்து வைத்தோம். முதலில் எந்த பிரச்சனையும் வராதா சித்தா கேரக்டர், சிறுமி காணாமல் போன பிறகு இருக்கும் சித்தா கேரக்டர், பிரச்சனையில் மாட்டிக்கொண்ட சித்தா கேரக்டர் என மூன்று வகையாகப் பிரித்து அந்த மூன்று சித்தாவுக்கான நடவடிக்கைகள் மனதளவில் எப்படி இருக்கும் என்பதற்கான வேலைகளை செய்தோம். திரைப்பட அனுபவம் இருந்ததால் அவர் அந்த கதாப்பாத்திரத்தை எளிதில் கையாண்டார். கருடன் படத்தில் பணியாற்றும்போது முதலில் படத்தின் இயக்குநரோடு கதையைப் பற்றி கலந்தாலோசித்தோம். படத்தில் சூரியை ஒரு நாயுடன் இயக்குநர் ஒப்பிட்டிருப்பார்கள். படம் முழுவதுமே சூரி அந்த நாயைப் போலத்தான் நடந்திருப்பார். ஆனால் அது முழுவதும் வெளியில் தெரிந்திருக்காது. அதே சமயம் அது நார்மலான சூரியின் நடையாக இருந்திருக்காது. நாயின் அசைவுகளை வைத்து சூரியின் கதாபாத்திரத்தை அந்த படத்தில் வடிவமைத்திருந்தோம்.
ஏ.ஆர். முருகதாஸ் படத்தில் சிவகார்த்திகேயனை நடிக்க வைப்பதற்கு சென்றேன். அப்போது சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களிலிருந்த கேரக்டரின் நடவடிக்கைகள் சிவகார்த்திகேயனிடம் இருக்கக் கூடாது என்று ஏ.ஆர். முருகதாஸ் சொன்னார். அதே போல் என்ன சொல்லிக் கொடுத்தாலும் சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் தன்மை சிவகார்த்திகேயனிடம் இருந்தது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனின் நடை, உடல் பாவனை போன்ற நிறைய விஷயங்களை மாற்றி இருக்கிறோம். சொன்னதையெல்லாம் அவரும் கேட்டுக்கொண்டார். ஒரு சீனுக்கான நடிப்பு வரவில்லையென்றால் என்னை அழைத்து சிவகார்த்திகேயன் கேட்பார். உடனே அந்த சீனுக்கு வேறு விதத்தில் நடிக்கச் சொல்லிக்கொடுத்தால் அதற்காக அவர் மெனக்கெட்டு முயற்சி செய்து நடிப்பார். இப்போது சண்டைக் காட்சிகளில் மிகவும் அருமையாக நடித்து வருகிறார்” என்றார்.