சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பேராசிரியர்கள் நான்கு பேர் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் எழுந்த நிலையில், இது தொடர்பாக கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இந்த விவகாரம் பரவலாகப் பேசப்பட, இந்தப் புகார் தொடர்பாக அந்தக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் ஹரி பத்மன் மீது போலீசார், மகளிர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக டிஜிபி லத்திகா சரண் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அபிராமி, "அந்த கல்லூரியின் முன்னாள் மாணவி நான். 89 வருஷமா இந்த கல்லூரியில் இதுபோன்று ஒரு பிழை சொல்வதற்கு எதுவுமே நடக்கவில்லை. கலாஷேத்திரா என்ற பெயரை கூட சரியாக உச்சரிக்க தெரியாதவர்கள், கல்லூரியை பற்றி தவறாக சொல்கிறார்கள். அது எனக்கு மிகவும் வேதனையளிக்கிறது. கலாஷேத்திரா கல்லூரி குறித்து அவதூறு பரப்பக்கூடிய வேலை தான் தற்போது நடைபெற்று வருகிறது. ஒரு பக்கம் மட்டும் பார்க்கக் கூடாது. ஆசிரியருக்கும் குடும்பம் இருக்கு" என கல்லூரிக்கு ஆதரவாக பேசியிருந்தார்.
இவர் பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாக, பலரும் பெண்களின் உரிமை பற்றி பேசிய அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்துவிட்டு இப்படி பேசலாமா என்றும் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்க வேண்டும் எனவும் அபிராமிக்கு எதிராக பதிவுகளை பகிர்ந்து வந்தனர். இந்த நிலையில் இந்த விமர்சனங்கள் குறித்து தனது இன்ஸ்டாக்ராம் ஸ்டோரியில் பேசியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டது, "நேர்கொண்ட பார்வை போன்ற படத்தில் நடித்துவிட்டு, கலாஷேத்ராவில் நடக்கும் பிரச்சனை குறித்து ஏன் குரல் கொடுக்காமல் இருக்குறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது.
முதலில் ஒரு விஷயத்தை தெளிவாகச் சொல்லிவிடுகிறேன், படத்தில் நடிக்கும் முன், நான் எப்போதும் உண்மைக்காகவே குரல் கொடுத்துள்ளேன். அதை வெளிப்படையாகப் பேச பயந்ததில்லை. நான் மற்றவர்களின் ஈகோ மற்றும் பொறாமைகளுக்காக மாத்தி மாத்தி பேசும் நபர் அல்ல. நான் செய்தியாளர்களிடம் பேசியது தெளிவாக நினைவில் இருக்கிறது. எனக்கு அது பற்றி பேச விரும்பவில்லை. அதனால் குரல் கொடுக்காமல் இருந்தேன். அதற்கு காரணம் என்ன என்பதை யாரும் கேட்காமல். அதற்கு பதிலாக என்னை துன்புறுத்தத் தொடங்கிவிட்டார்கள்.
நான் மீண்டும் சொல்கிறேன் கலாஷேத்ராவை பற்றி அவதூறு பரப்பும் முன் பிரச்சனையின் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ளுங்கள். மாணவர்களுக்கு எதிரான நபர் நான் இல்லை என்பதை மறுபடியும் வலியுறுத்த விரும்புகிறேன். பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு நான் ஆதரவளிக்கிறேன்" என குறிப்பிட்டு பல்வேறு நிகழ்வுகளை குறிப்பிட்டுள்ளார்.
அவரது கடைசி பதிவில், "சாதி குறித்து பேசுவதை நான் விரும்பவில்லை. அதை நான் நம்பியதும் இல்லை. தயவு செய்து எதையும் திரிக்க வேண்டாம்" எனக் குறிப்பிட்டு கல்லூரியில் அவர் படிக்கும்போது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். மேலும் "நாங்கள் குடும்பம் போல் இருந்தோம். சாதிய மனநிலையில் நாங்கள் நடத்தப்பட்டிருந்தால் இதுபோன்று மகிழ்ச்சியாக இருக்க முடியாது” எனப் பதிவிட்டிருந்தார். இந்த பதிவில் சாதி (caste) என்பதற்கு நடிகர்கள் (cast) எனக் குறிப்பிட்டிருந்தார். இதனைப் பார்த்த ரசிகர்கள் "கலாஷேத்ரா என்ற பெயரை கூட சரியாக உச்சரிக்க தெரியாதவர்கள், கல்லூரியை பற்றி தவறாக சொல்கிறார்கள் என அபிராமி பேசியதை மேற்கோள்காட்டி முதலில் சாதி பற்றி நீங்கள் சரியாக குறிப்பிட கற்றுக் கொள்ளுங்கள்" எனப் பதிவிட்டு வருகின்றனர்.