கேரளா முழுவதும் கன மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடு வாசல்களை இழந்து, உடமைகளை பறிகொடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஆங்காங்கே முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு தரப்பிலிருந்தும் அவர்களுக்கான உதவிக்கரங்கள் நீள தொடங்கியிருக்கின்றன. அந்தவகையில் 'கேரளா நாட்டிளம் பெண்களுடனே' புகழ் நடிகர் அபிசரவணன் கேரளாவில் வயநாடு, குட்டநாடு பகுதியில் தனது சகாக்களுடன் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளார். சுமார் ரூ.1.25 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை வாங்கிக்கொண்டு கேரளாவுக்குள் நுழைந்துள்ளார் அபிசிராவணன். மேலும் வயநாடு பகுதி எம்.எல்.ஏவை தொடர்புகொண்ட அவர் அங்கு கலெக்டர் வழிகாட்டுதலின்படி அங்குள்ள சிலரை உதவிக்கு அழைத்துக்கொண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார். இதன்மூலம் ஏழு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள சுமார் 2000 பேர்களுக்கு இவர்களது உதவி சென்று சேர்ந்துள்ளது. இவர் ஏற்கனவே கன்னியாகுமாரியில் ஏற்பட்ட ஓகி புயலின் பாதிப்பின்போது இதேபோல் நிவாரண பொருட்கள் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.