நண்பன் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் நண்பன் கலை பண்பாட்டு ஆய்வு மற்றும் கருவூல மையம் ஆகியவற்றின் தொடக்க விழா மற்றும் விருது வழங்கும் விழா சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நண்பன் குழுமத்தின் இணை நிறுவனரும், தொழிலதிபருமான நண்பன் மணிவண்ணன், விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார். அவரைத் தொடர்ந்து நண்பன் குழுமத்தின் இந்தியாவிற்கான விளம்பரத் தூதுவரும், நடிகருமான ஆரி அர்ஜுனன் பேசுகையில், ''இந்த மேடையில் நான் நிற்பதற்கும், வாழ்க்கையில் இந்த அளவிற்கான உயரத்தை எட்டியிருப்பதற்கும் காரணம் நண்பர்கள்தான்.
நண்பன் குழுமத்தின் நிறுவனரான ஜி கே எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். பிக் பாஸிலிருந்து வெளியே வந்து இரண்டாண்டுகளாகிறது. கையில் பணம் இல்லை. இருந்தாலும் என் மூலமாக சமூகத்திற்கு என்ன செய்ய முடியும், என்பதைக் குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறேன். நான் அவர்களிடத்தில் என்னை ஏன் விளம்பர தூதுவராகத் தேர்ந்தெடுத்தீர்கள்? எனக் கேட்டபோது, பணத்திற்காக நிறையப் பேர் வருவார்கள். புகழுக்காகவும் நிறையப் பேர் வருவார்கள். ஆனால் இந்தச் சமூகத்திற்காக வருபவர் நீங்கள் மட்டும்தான். அதனால்தான் உங்களைத் தேர்வு செய்தோம் என்றார்கள். சமூகத்திற்குச் சேவை செய்பவர்கள், நட்சத்திர நடிகர்களாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை என்றார்கள். இந்த மேடை கலை மற்றும் கலைத்துறையில் பணியாற்றும் கலைஞர்களுக்கு முக்கியமான மேடை. நண்பன் குழுமம் கலைஞர்களுக்காக உருவாக்கிய அமைப்பின் முதல் நிகழ்வு.'' என்றார்.
விழாவில், நண்பன் க்ராஃப்ட் மாஸ்டர்ஸ் விருது இயக்குநர் பாக்யராஜ், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், இயக்குநர் சேரன், கலை இயக்குநர் முதுதுராஜ், இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இதற்கு முன்னதாக கலை மற்றும் பண்பாட்டுத் துறையில் சிறந்த சேவை செய்துவரும் கலைஞர்களான ஓவியர் ட்ராஸ்ட்கி மருது, பேராசிரியர் மு. ராமசாமி, கவிஞர் அறிவுமதி, புரிசை கண்ணப்ப சம்பந்தம், பெரிய மேளம் கலைஞர் முனுசாமி ஆகியோருக்கு நண்பன் விருது வழங்கப்பட்டது. இதனைத் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேனாண்டாள் முரளி ராமசாமி, நடிகர் சங்கத் தலைவர் நாசர், ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம் ஆகியோர் வழங்கினர்.
இவர்களைத் தொடர்ந்து நண்பன் டேலண்ட் கேட்வே விருதினை அறிமுகப் படைப்பாளிகளான கணேஷ் கே. பாபு, விக்னேஷ் ராஜா, விநாயக் சந்திரசேகரன், முத்துக்குமார், மந்திரமூர்த்திக்காக அருவி மதன் ஆகியோர் விருதினைப் பெற்றுக்கொண்டனர். இவர்களுக்கு இந்த விருதினை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேனாண்டாள் முரளி ராமசாமி, செயலாளர் கதிரேசன், நடிகர் சங்கத் தலைவர் நாசர், ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம், இயக்குநர் சேரன் ஆகியோர் வழங்கினர். விருதாளர்கள் அனைவருக்கும் விருதுடன் ஒரு இலட்ச ரூபாய் ரொக்கத் தொகையும் வழங்கப்பட்டது.