'தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்' படத்தை தொடர்ந்து அமீர் கான் 'லால் சிங் சத்தா' என்னும் படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தை அத்வைத் சந்தன் இயக்கியுள்ளார். அமீர் கானுக்கு ஜோடியாக கரீனா கபூர் நடிக்க, மோனா சிங், நாகா சைதன்யா உள்ளிட்டோர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது 1994ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் டாம் ஹான்க்ஸ் நடிப்பில் வெளியாகி, உலகம் முழுவதும் பல விருதுகளைக் குவித்த ‘ஃபாரஸ்ட் கம்ப்’ படத்தின் அதிகாரப்பூர்வ தழுவல் ஆகும். இந்தப் படத்தில் குறைந்த அளவிலான ஐக்யூ உள்ளவர் கதாபாத்திரத்தில் அமீர்கான் நடித்துள்ளார். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதனிடையே சமீபத்தில் #boycottLaalSinghChaddha என்ற ஹேஷ்டேக்குகள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டானது. பொதுவாக அமீர் கான் படம் வெளியாகும் போதெல்லாம் இந்த மாதிரியான நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. கடந்த 2015 ஆம் ஆண்டு அமீர் கான் அளித்த பேட்டி ஒன்றில் இந்தியாவில் சகிப்புத்தன்மையின்மை அதிகரித்து வருகிறது என்று தெரிவித்திருந்தார். அதிலிருந்து தற்போது வரை அமீர் கானின் படங்கள் வெளியாகும் போதெல்லாம் இந்த மாதிரியான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில் 'லால் சிங் சத்தா' படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அமீர் கான், "நான் இது குறித்து உண்மையில் வருத்தப்படுகிறேன். இப்படியான பிரச்சாரத்தைப் பரப்பும் சிலர், இதயப்பூர்வமாக நான், நாட்டை நேசிக்கவில்லை என நம்புகிறார்கள் என நினைக்கிறேன். ஆனால் அது உண்மைக்குப் புறம்பானது. நான் நாட்டை மிகவும் நேசிக்கிறேன். தயவுசெய்து என் படத்தைப் புறக்கணிக்காதீர்கள். என் படத்தைப் பாருங்கள்'' எனக் கூறியுள்ளார்.