‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ படத்திற்குப் பிறகு அமீர்கான் நடிக்கும் படம் ‘லால் சிங் சட்டா’. இது 1994ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படமான ‘ஃபாரஸ்ட் கம்ப்’ படத்தின் ரீமேக் ஆகும். அமெரிக்க அரசியல் வரலாற்றை ஒட்டியதுபோன்று உருவாக்கப்பட்ட இந்தப் படம், பல விருதுகளையும், நல்ல வசூலையும் பெற்றது. இந்நிலையில் இந்தப் படத்தை இந்தியாவிற்கு ஏற்றார்போல கதையில் திருத்தம் செய்து எடுக்க திட்டமிட்டு, கடந்த ஒரு வருடமாக ஷூட்டிங் நடைபெற்று வந்தது. இதில் அமீர்கான் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, நடிகர்கள் ஷாரூக் கானும், சல்மான் கானும் கவுரவ கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சென்ற வருடமே இப்படம் வெளியாகும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. பின்னர் தளர்வுகளுக்குப் பின் மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எனவே இந்த வருடம் கிறிஸ்துமஸ் தினத்தன்று படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தப் படம் வெளியாகும் வரை மொபைல் ஃபோன் பயன்படுத்தப் போவதில்லை என்று அமீர்கான் முடிவெடுத்துள்ளதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. வேலை நேரத்தில் மொபைல் அழைப்புகள் அவருக்குத் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்துவதால் அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. பொதுவாக அமீர்கான் தான் நடிக்கும் கதாபாத்திரமாகவே படப்பிடிப்பு முடியும் வரை இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.